பாகிஸ்தானில் இருந்து டிரோன்களைப் பயன்படுத்தி ஆயுதங்களை கடத்திய சர்வதேச ஆயுத கடத்தல் கும்பலைச் சேர்ந்த 4பேர் டெல்லியில் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து விலை உயர்ந்த வெளிநாட்டு கைத்துப்பாக்கிகள் மீட்கப்பட்டுள்ளன.
பாகிஸ்தானின் உளவு நிறுவனமான ஐஎஸ்ஐ அமைப்புடன் தொடர்புடைய மிகப்பெரிய சர்வதேச ஆயுதக் கடத்தல் கும்பலை டெல்லி காவல்துறையின் குற்றப்பிரிவு, போலீஸார் கண்டுபிடித்துள்ளனர். அத்துடன் ஆயுதக்கடத்தல் கும்பலை சேர்ந்த நான்கு பேரையும் கைது செய்துள்ளனர். அவர்களிடமிருந்து துருக்கியில் தயாரிக்கப்பட்ட PX-5.7 கைத்துப்பாக்கிகள் மற்றும் சீனாவில் தயாரிக்கப்பட்ட PX-3 கைத்துப்பாக்கிகள், தோட்டாக்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்துள்ளனர்.
அவர்கள் உயர் ரக வெளிநாட்டு துப்பாக்கிகள் மற்றும் வெடிமருந்துகளை பாகிஸ்தானில் இருந்து டிரோன்களைப் பயன்படுத்தி இந்தியாவிற்கு கடத்தியது விசாரணையில் தெரிய வந்தது. அவர்களிடமிருந்து 10 செ.மி ஆட்டோமேட்டிக் கைத்துப்பாக்கிகள் மற்றும் 92 லைவ் கார்ட்ரிட்ஜ்களை பறிமுதல் செய்தனர்.
டெல்லி போலீஸாரால் கைது செய்யப்பட்ட நான்கு பேரும் அஜய், மன்தீப், தல்விந்தர் மற்றும் ரோஹன் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். பாகிஸ்தானில் இருந்து டிரோன்களைப் பயன்படுத்தி பஞ்சாபில் கடத்தப்பட்டு அங்கிருந்து கும்பல்களுக்கு விற்கப்பட்டன. இது தொடர்பாக டிசிபி சஞ்சீவ் குமார் யாதவ் கூறுகையில், டெல்லி மற்றும் அண்டை மாநிலங்களில் உள்ள குற்றவாளிகளுக்கு இந்த அதிநவீன ஆயுதங்களை வழங்கும் இந்த கும்பல் எல்லை தாண்டி ஆயுதங்களை கடத்துவதற்கு டிரோன்களைப் பயன்படுத்தியுள்ளனர்.
துருக்கிய தயாரிப்பான PX-5.7 கைத்துப்பாக்கி சிறப்புப் படைகளால் பயன்படுத்தப்படும் ஒரு உயர் தொழில்நுட்ப ஆயுதம் என்று காவல் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.சீனாவில் தயாரிக்கப்படும் PX-3 கைத்துப்பாக்கிகள் ஆயுதங்கள் கடத்தப்படுவது கண்டுபிடிக்கப்பட்டது இந்த கும்பலின் சர்வதேச வேர்களை கண்டறிய வைத்துள்ளது என்றும் தெரிவித்தனர்.


