கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தேர்தல் பணிச்சுமை காரணமாக கிராம நிர்வாக அலுவலர்(பிஎல்ஓ) தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம், சிவனார்தாங்கல் கிராமத்தில் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வந்தவர் ஜாகிதா பேகம்(38). இவர் கடந்த சில நாட்களாக வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தப் பணியில் (எஸ்ஐஆர்) பிஎல்ஓவாக ஈடுபட்டு வந்ததாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில், ஜாஹிதா பேகம் நேற்று மாலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திருக்கோவிலூர் போலீஸார், ஜாஹிதா பேகத்தின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி மாவட்ட மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, இச்சம்பவம் குறித்து திருக்கோவிலூர் போலீஸார், மன உளைச்சலால் தற்கொலை என வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த சம்பவம் குறித்து ஜாஹிதா பேகத்தின் கணவர் கூறுகையில், “நேற்று எஸ்ஐஆர் படிவங்களை எடுத்துக்கொண்டு பேகத்தை நான் அழைத்துச் சென்றேன். இதில், 30 படிவங்களை பூர்த்தி செய்து அவர் கொடுத்துவிட்டார். இதற்கிடையில், இணையதள சேவை சரியாக இல்லாததால் 60 விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்ய முடியவில்லை. நெட் சென்டர் சென்று பார்த்தபோது அங்கே ஸ்கேன் செய்ய முடியாது என தெரிவித்தனர். இதனால், வீட்டிற்கு வந்து ஏழு படிவங்களை பதிவேற்றம் செய்தார். அதன் பின்னர் என்னை கடைக்குச் சென்று வருமாறு கூறினார். நானும் கடைக்குச் சென்றேன். ஆனால், அரை மணிநேரத்தில் என் மனைவி தற்கொலை செய்து கொண்டதாக எனக்கு தகவல் வந்தது. நான் உடனடியாக அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றேன். ஆனால், அவர் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இதற்கு காரணம் உயர் அதிகாரிகள் கொடுத்த அழுத்தம்தான். என் மனைவி எங்களை விட்டு சென்றுவிட்டார். எனது இரண்டு குழந்தைகளை வைத்துக்கொண்டு நான் என்ன செய்வேன். எங்களுக்கு யார் என்ன உதவி செய்வார்?” என்று கண்ணீருடன் கூறினார். ஜாகிதா பேகம் 800 படிவங்கள் முடிக்க வேண்டிய நிலையில் வெறும் 80 படிவங்களுக்கான வேலைகளை மட்டுமே முடித்திருந்ததாக கூறப்படுகிறது.
இதனால் ஜாகிதா பேகத்தை அதிகாரிகள் மற்றும் அப்பகுதி ஆளும்கட்சி நிர்வாகிகள் கண்டித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனால் அவர் தற்கொலை செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


