தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை நிறுத்தி வைக்க ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு அதிகாரமில்லை என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளிப்பதில் கால தாமதம் செய்வதாக, உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் வழக்குத் தொடரப்பட்டது. இதை விசாரித்த நீதிமன்றம், ‘மசோதாக்கள் மீது ஒரு மாதத்தில் இருந்து மூன்று மாதத்திற்குள் முடிவெடுக்க வேண்டும் என, ஆளுநர்கள் மற்றும் குடியரசு தலைவருக்கு வரம்பு நிர்ணயித்து தீர்ப்பளித்தனர். இந்த தீர்ப்பு குறித்து, 14 கேள்விகளை எழுப்பிய குடியரசு தலைவர் திரவுபதி முர்மு, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதினார்.
அந்த கடிதத்தையே வழக்காக மாற்றிய தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய், இதன் மீது ஐந்து நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு விசாரணை நடத்தும் என அறிவித்தார். அதன்படி, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய், நீதிபதிகள் சூர்யகாந்த், விக்ரம் நாத், பி.எஸ்.நரசிம்மா, அதுல் எஸ்.சந்துர்கர் ஆகிய ஐந்து நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு இந்த வழக்கை தொடர்ந்து விசாரித்தது. கடந்த செப்டம்பர் 11-ம் தேதி விசாரணை முடிவடைந்தது.
இந்த நிலையில், இன்று (நவம்பர் 20) ஐந்து நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு அளித்தது. அதில், ஆளுநர் மட்டுமின்றி குடியரசுத் தலைவரும் மசோதாக்கள் மீது குறிப்பிட்ட காலத்திற்குள் தனது முடிவை தெரிவிக்க வேண்டும் என கால நிர்ணயம் செய்து உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அடங்கிய அமர்வு, அதிரடியாக தீர்ப்பளித்தது.
அந்த தீர்ப்பில். ‘ ஆளுநர், தனக்கு அனுப்பி வைக்கப்படும் மசோதாக்களை ஏற்கவோ, நிராகரிக்கவோ (சட்டப் பேரவைக்குத் திருப்பி அனுப்புவது) செய்ய வேண்டும். அல்லது குடியரசுத் தலைவருக்கு அனுப்பிவைக்க வேண்டும். இந்த மூன்று வாய்ப்புகள் மட்டுமே ஆளுநர் முன்பு உள்ளன. நான்காவது வாய்ப்பாக நீண்ட நாட்களுக்குக் கிடப்பில் போட்டுவைக்க ஆளுநருக்கு அதிகாரமில்லை. மசோதா தொடர்பான வேறுபாடுகளைத் தீர்க்க மாநில அரசுடன் ஆளுநர் பேச்சுவார்த்தை மேற்கொள்ள வேண்டும்’ என உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அமர்வு தெரிவித்துள்ளது.
அதேபோல, ‘ ஒரு மாநிலத்துக்கு இரண்டு அதிகார அமைப்புகள் இருக்கக் கூடாது. அதை எங்களால் ஏற்க முடியாது. மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசு, அமைச்சரவைதான் முதன்மையாக இருக்க வேண்டும். மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்க, ஒவ்வொரு முறையும் நீதிமன்றத்தின் கருத்தைக் கேட்க வேண்டியதில்லை. அரசமைப்பு சாசனப் பிரிவுகள் 200 மற்றும் 201 ஆகியவை நெகிழ்ச்சித்தன்மையை அனுமதிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. எனினும் இதற்குக் காலக்கெடு விதிப்பது கண்டிப்பாக முரணானது; என்றும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், ‘ ஆளுநர், குடியரசுத் தலைவருக்கு உச்ச நீதிமன்றம் காலக்கெடு விதிக்க முடியாது. அவ்வாறு காலக்கெடு விதிப்பது, அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரானது. உரிய காலத்துக்குள் மசோதா மீது முடிவெடுக்குமாறு கேட்டுக்கொள்ள மட்டுமே முடியும். மசோதாக்கள் நீண்ட காலமாக கிடப்பிலேயே கிடந்தால் நீதிமன்றம் மறு ஆய்வு மட்டுமே செய்ய முடியும்’ என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.


