உத்தரப்பிரதேச மாநிலத்தில் கல்குவாரி இடிந்து விழுந்ததில் 7 தொழிலாளர்கள் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
உத்தரப் பிரதேச மாநிலம், சோன்பத்ரா மாவட்டத்தில் உள்ள கல்குவாரியில் தொழிலாளர்கள் வேலை செய்துகொண்டிருந்தனர்.நவம்பர் 15-ம் தேதி திடீரென பாறைகள் இடிந்து விழுந்ததில் தொழிலாளர்கள் சிக்கிக் கொண்டனர். இதையடுத்து இடத்தில் காவல்துறை, தேசிய பேரிடர் மீட்புப் படை மற்றும் சுரங்கப் பாதுகாப்பு அதிகாரிகள் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். ஆனால், இடிபாடுகளை அகற்றுவதில் சிக்கல் ஏற்பட்டது.
இந்த நிலையில் இடிபாடுகளில் இருந்து கர்ம்சர் பசாரியைச் சேர்ந்த ராஜு சிங்(28), சந்தோஷ்(30) மற்றும் அவரது சகோதரர் இந்திரஜித்(32), பனாரி டோலாவைச் சேர்ந்த ராம்கெலவன்(40), பிபர்கடா கோனைச் சேர்ந்த ரவீந்திர டோண்ட்(25), பர்சோய் டோலாவைச் சேர்ந்த குலாப் கர்வார் என்ற முன்ஷி(32) ஆகியோரின் உடல்கள் மீட்கப்பட்டன. இந்த நிலையில் இடிபாடுகளில் இருந்து மற்றொரு உடல் நேற்று மீட்கப்பட்டது. அவர் காத்ரி பனாரியைச் சேர்ந்த கிருபா சங்கர் கர்வார்(30) என அடையாளம் காணப்பட்டது.
இந்த நிலையில், சோன்பத்ரா மாவட்ட டி.எம் பத்ரிநாத் சிங் மற்றும் எஸ்.பி அபிஷேக் வர்மா சம்பவ இடத்திற்கு வந்தனர். நான்கு நாட்களாக நடைபெற்ற மீட்பு நடவடிக்கை முடிவுக்கு கொண்டு வருவதாக அறிவித்தனர். என்டிஆர்எஃப் குழு இரண்டு முறை இடிபாடுகளை முழுமையாக அகற்றியுள்ளது. எனவே, இப்போது யாரும் அங்கு இருக்க வாய்ப்பில்லை. நவம்பர் 15-ம் தேதி தொடங்கிய தேடுதல் நடவடிக்கையில் இடிபாடுகளில் இருந்து 7 உடல்கள் மீட்கப்பட்டு சம்பந்தப்பட்டவர்களின் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. இறந்தவர்களின் குடும்பங்களுக்கு சுமார் 20 லட்ச ரூபாய் அரசு சார்பில் நிதி வழங்கப்படும் என்று அறிவித்தனர். ஆனால், 16 தொழிலாளர்கள் குவாரியில் வேலை செய்ததாகவும், மீதமுள்ளவர்களின் நிலை என்ன ஆனது என்ற கேள்வியும் எழுந்துள்ளது.


