வீட்டில் மயங்கி விழுந்த பாலிவுட் நடிகர் கோவிந்தா மும்பையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பாலிவுட் திரைப்படங்களில் பிரேக் டான்ஸ் ஆடி புகழ்பெற்றவர் நடிகர் கோவிந்தா(61). கடந்த 1980-ம் ஆண்டு முதல் 165 திரைப்படங்களில் நடித்துள்ள கோவிந்தா, நேற்று இரவு வீட்டில் சுயநினைவின்றி மயங்கி விழுந்தார். இதனால் பதறிப்போன வீட்டில் இருந்தவர்கள், மருத்துவர்களுக்கு செல்போனில் பேசி சில மருந்துகளைக் கொடுத்தனர். ஆனாலும், நிலைமை சரியாகவில்லை.
இதையடுத்து அதிகாலை 1 மணியளவில் நடிகர் கோவிந்தா, மும்பை ஜுகுவில் உள்ள கிரிட்டிகேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அங்கு மருத்துவர்களின் கண்காணிப்பில் உள்ள கோவிந்தாவுக்கு சில பரிசோதனைகள் எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
கோவிந்தாவுக்கு ஏற்கெனவே உடல்நிலை சரியில்லாமல் இருந்ததாகவும், சோர்வுற்ற நிலையில் காணப்பட்டதாகவும் அவரது வழக்கறிஞரும், நண்பருமான லலித் பிந்தால் தெரிவித்துள்ளார். தற்போது கோவிந்தாவின் உடல்நிலை சீராக இருப்பதாக அவரது தரப்பு உறுதி செய்துள்ளது. கோவிந்தா விரைந்து நலமடைய வேண்டும் என அவரது ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.


