துருக்கி ராணுவ விமானம் 20 ராணுவ வீரர்களுடன் நடுவானில் தீப்பிடித்து தரையில் நொறுங்கி விழுந்து விபத்திற்குள்ளானது.
துருக்கிக்குச் சொந்தமான நேட்டோ ராணுவ விமானம் அஜர்பைஜானில் புறப்பட்டு துருக்கிக்கு திருப்பிக் கொண்டிருந்தது. அந்த சரக்கு விமானத்தில் 20 ராணுவவீரர்கள் இருந்தனர். இந்த விமானம் ஜார்ஜியா எல்லை அருகே வந்து கொண்டிருந்த போது விமானியின் கட்டுப்பாட்டை இழந்து வானில் சுழன்றது. அப்போது விமானம் நடுவானில் தீப்பிடித்து இரண்டாக உடைந்து எரிந்தவாறு தரையில் மோதி வெடித்தது. இதனால் அதில் இருந்த 20 ராணுவவீரர்கள் என்ன ஆனார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது.
துருக்கி பாதுகாப்பு அமைச்சகத்திற்கு சொந்தமான சி-130 என்ற அந்த விமானத்தின் பாகங்கள் தரையில் சிதறிக் கிடந்தன. அந்த விமானம் விழுந்த இடத்தில் ஒரு பெரிய வெடிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த விபத்துக்கான காரணம் குறித்து முதல் தகவல் கிடைக்கவில்லை. ஜார்ஜியாவில் விமான விபத்து குறித்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. விமானம் எரிந்தவாறு தரையில் விழுந்த காட்சி சமூக ஊடங்களில் வைரலாகி வருகிறது.
இந்த விபத்து குறித்து துருக்கி தேசிய பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘அஜர்பைஜானில் இருந்து நம் நாட்டிற்குப் புறப்பட்ட சி-130 சரக்கு விமானம் ஜார்ஜியாவில் விபத்துக்குள்ளானது. ஜார்ஜிய அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து தேடுதல் மற்றும் மீட்பு முயற்சிகள் தொடங்கப்பட்டுள்ளன. என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


