பாலிவுட் திரையுலகின் பழம் பெரும் நடிகர் தர்மேந்திரா இன்று காலமானார் என்ற செய்தியை அவரது மகள் நடிகை ஈஷா தியோல் மறுத்துள்ளார்.
இந்திய திரையுலகில் பிரபல நடிகராக விளங்கியவர் தர்மேந்திரா. இவர் ‘ஆயி மிலன் கி பேலா’, ‘ஃபூல் அவுர் பத்தர்’, ‘ஆயே தின் பஹார் கே’, ‘சீதா அவுர் கீதா’, ‘ராஜா ஜானி’, ‘ஜுக்னு’, ‘யாதோன் கி பாராத்’, ‘தோஸ்த்’, ‘ஷோலே’, ‘பிரதிக்ஞா’, ‘சரஸ்’, ‘தரம் வீர்’ உள்பட 300-க்கும் மேற்பட்ட இந்தி படங்களில் நடித்துள்ளார். கடந்த 2023-ம் ஆண்டு கரண் ஜோஹர் இயக்கிய ‘ராக்கி அவுர் ராணி கி பிரேம் கஹானி’ படத்தில் அவர் கடைசியாக நடித்திருந்தார்.
வயது மூப்பு காரணமாக, உடல்நலக்குறைவு ஏற்பட்டு, மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நடிகர் தர்மேந்திரா சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார் என்ற தகவல் பரவியது. ஆனால், தனது தந்தை நலமுடன் இருப்பதாக தர்மேந்திராவின் மகள் நடிகை ஈஷா தியோல் மறுப்பு தெரிவித்துள்ளார். அவர் குணமடைந்து வருகிறார். அவர் விரைவில் குணமடைய பிரார்த்திக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.


