டெல்லி கார் குண்டு வெடிப்பு சம்பவத்திற்கு உள்துறை மற்றும் உளவுத்துறை ஆகியவற்றைத் தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ள ‘மோடி-அமித்ஷா-அம்பானி’ கூட்டணி தானே பொறுப்பேற்க வேண்டும் என்று திருமாவளவன் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “டெல்லி செங்கோட்டை அருகே கார் குண்டு வெடித்து பத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் பலியாகியிருப்பது மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. இருபதுக்கும் மேற்பட்டோர் படுகாயமுற்று சிகிச்சைப் பெற்று வருகின்றனர். நாட்டின் தலைநகரிலேயே, அதுவும் அதிஉயர் பாதுகாப்பு வளையத்துக்குட்பட்ட பகுதியிலேயே காரில் வெடிமருந்தை நிரப்பிக்கொண்டு எப்படி ஊடுருவ முடிந்தது?
உள்துறை மற்றும் உளவுத்துறை ஆகியவற்றைத் தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ள ‘மோடி-அமித்ஷா-அம்பானி’ கூட்டணி தானே இதற்கு பொறுப்பேற்க வேண்டும்?
பிஹார் சட்டமன்றப் பொதுத்தேர்தலின் இரண்டாம் கட்ட வாக்குப் பதிவுக்கு முதல் நாளில் இப்படி நடந்திருப்பதால் இதனை அத்தேர்லோடு முடிச்சுப்போட்டுப் பார்க்கும் நிலை உருவாகிறது.
ஏற்கெனவே இப்படிப்பட்ட பயங்கரவாத நடவடிக்கைகள் தேர்தல் காலங்களில் நடந்தேறியுள்ளன. உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு விசிக சார்பில் எமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறோம் . பொதுமக்களுக்கு எதிரான இத்தகைய கொடூரப் போக்குகளை வி.சி.க. மிக வன்மையாகக் கண்டிக்கிறது.குற்றவாளிகள் ஒருவரும் தப்பிவிடக் கூடாது. அனைவரையும் கைது செய்ய வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


