திருச்சியில் காவலர் குடியிருப்பில் இளைஞர் ஒருவரை ஒரு கும்பல் ஓட ஓட விரட்டி தலையை துண்டித்து படுகொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி பீமநகர் செடல் மாரியம்மன் கோயில் கீழத்தெருவைச் சேர்ந்தவர் தாமரைச்செல்வன் (25).இவர் கன்ட்ரோல்மென்ட் பகுதியில் உள்ள தனியார் மோட்டார் நிறுவனத்தில் வேலை பார்த்தார். இந்நிலையில் இன்று காலை அவர் வீட்டிலிருந்து தனது இருசக்கர வாகனத்தில் வேலைக்கு புறப்பட்டுச் சென்றார். பழைய போஸ்ட் ஆபீஸ் சாலை வழியாக வந்து அவரை ஐந்து பேர் கும்பல் அரிவாளுடன் வெட்ட துரத்தியது. அப்போது அவர்களிடமிருந்து தப்பித்து செல்ல முயன்றார். அவரை துரத்திச் சென்ற கும்பல் பீமா நகர் காவலர் குடியிருப்பு வாசலில் அவரை மறித்து வெட்டியது.
இதனால் வெட்டுப்பட்ட தாமரைச் செல்வன் அவர்களிடம் இருந்து தப்பிப்பதற்காக இருசக்கர வாகனத்தை போட்டுவிட்டு காவலர் குடியிருப்புக்குள் உள்ளே ஓடினார்.அவர் ஏ பிளாக்கில் தில்லைநகர் எஸ்எஸ்ஐ செல்வராஜ் வீட்டுக்குள் தப்பியோடினார். ஆனால், அவரைப் பின் தொடர்ந்து ஓடிய கும்பல் வீட்டுக்குள் புகுந்து சரமாரியாக வெட்டியது. இதில் தாமரைச் செல்வனின் தலை துண்டானது. இதனால் வீட்டிற்குள் இருந்த செல்வராஜ் குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர். இதன் பிறகு அந்த கும்பல் அங்கிருந்து தப்பியோடியது.
அப்போது காவலர் குடியிருப்பில் வசிக்கும் பிற போலீஸார், அந்த கும்பலை துரத்தி சென்றதில் ஒருவரை பிடித்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த பாலக்கரை இன்ஸ்பெக்டர் பேசில் பிரேம் ஆனந்த் மற்றும் போலீஸார் விரைந்து வந்து சம்பவ இடத்தை பார்வையிட்டனர். கோட்டை உதவி ஆணையர் சீதாராமன் மற்றும் போலீஸார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். அப்போது பிடிபட்டவர் இளமாறன் என தெரியவந்தது. தாமரைச்செல்வனை கொலை செய்தவர்கள் திருவானைக்காவல் பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் என்று தெரிய வந்துள்ளது. பொதுமக்கள் அதிகம் நடமாடும் பகுதியில் காவலர் குடியிருப்புக்குள் நுழைந்த கும்பல் இளைஞரை கொலை செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், தாமரைச்செல்வனை கொலை செய்த வழக்கில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தாமரைச்செல்வனுக்கும் சதீஷ் என்பவருக்கும் இடையே தகராறு இருந்துள்ளது. இதில் சதீஷை தாமரைச்செல்வன் அடித்ததால் பழிவாங்கும் நோக்கில் அவரை கொலை செய்ததாக கூறப்படுகிறது. இந்த கொலைச் சம்பவத்தில் ஈடுபட்டதாக சதீஷ் பிரபாகரன், நந்து, கணேசன் ஆகியோரை போலீஸார் கைது செய்தனர். ஏற்கெனவே இளமாறன் என்பவர் கைதாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.


