உங்கள் பகுதி வாக்காளர் பட்டியலில் போலி வாக்காளர்கள் பெயர் இடம் பெற்றிருக்கிறதா என்று ஆராயுங்கள். எஸ்ஐஆர் நடைமுறையின்போது வாக்காளர்கள் கவனமுடன் இருக்க வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரில் ரூ.223 கோடி மதிப்பில் முடிவுற்ற 577 திட்டப்பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார் மேலும்,. ரூ.203 கோடியில் 103 புதிய திட்டப் பணிகளுக்கு அவர் அடிக்கல் நாட்டினார். இதன் பின் அவர் பேசுகையில், “தகுதியுள்ள மகளிர் அனைவருக்கும் மாதந்தோறும் 1000 ரூபாய் வழங்கப்படும். இந்த திட்டம் சாத்தியமில்லை என அதிமுகவினர் கூறினர். அத்துடன் மகளிருக்கு 1000 ரூபாய் வழங்கும் திட்டத்தை பாதியில் நிறுத்தி விடுவார்கள் என வதந்தி பரப்பினர். பெற்றோர் இல்லாத குழந்தைகளுக்கு 2000 ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது.
நமது திட்டங்களை பிறமாநிலங்கள் முன்மாதியாக எடுத்துக்கொண்டுள்ளன. நியூயார்க் தேர்தலில் கட்டணமில்லா பேருந்து பயணம் வாக்குறுதியை தந்ததால் வெற்றி பெற்றுள்ளனர். கனடாவிலும் பள்ளிக்குழந்தைகளுக்கு காலை உணவுத்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. பாஜக. ஆளும் மாநிலங்களில் திமு.கவின் பல திட்டங்கள் அமல்படுத்தப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் இதுவரை மகளிர் உரிமைத்தொகையாக 27,000 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. எங்கள் அண்ணன் மாதந்தோறும் கொடுக்கும் சீர் மகளிர் உதவித்தொகை என மகளிர் கூறுகின்றனர். எனவே, வதந்திகளை நம்பாதீர்கள்.
திமுக மீண்டும் ஆட்சிக்கு வரும்போதும் மகளிர் உரிமைத்தொகை திட்டம் தொடரும். திமுக ஆட்சி 2.o உறுதியாகி விட்டது. திமுகவுக்கு தான் வாக்களிக்கப் போகிறீர்கள் என்பதில் எனக்கு சந்தேகம் இல்லை. வாக்குகளை உறுதி செய்து கொள்ள வேண்டும். திராவிட மாடல் ஆட்சியின் திட்டங்களால் எதிரிகளுக்கு அச்சம் ஏற்பட்டுள்ளது. உங்கள் பகுதி வாக்காளர் பட்டியலில் போலி வாக்காளர்கள் பெயர் இடம் பெற்றிருக்கிறதா என்று ஆராயுங்கள். எஸ்ஐஆர் நடைமுறையின்போது வாக்காளர்கள் கவனமுடன் இருக்க வேண்டும்” என்றார்.


