தூத்துக்குடியில் சாலை தடுப்பில் டூவீலர் மோதி தூக்கி வீசப்பட்டதில் இரண்டு விஏஓக்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி டூவிபுரம் இரண்டாவது தெருவைச் சேர்ந்தவர் ராமகிருஷ்ணன்(62). கிராம நிர்வாக அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். தூத்துக்குடி பி அன்ட் டி காலனி 8வது தெருவை சேர்ந்தவர் பேச்சிராஜா (55), இவர் தளவாய்புரம் கிராம நிர்வாக அதிகாரியாக பணியாற்றி வந்தார். இந்த நிலையில், இவர்கள் இருவரும் டூவீலரில் தளவாய்புரத்தில் இருந்து தூத்துக்குடிக்கு சென்று கொண்டிருந்தனர். பேச்சிராஜா பைக்கை ஓட்ட, ராமகிருஷ்ணன் பின்னால் அமர்ந்திருந்தார்.
தூத்துக்குடி – திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலை கோரம்பள்ளம் ஜங்ஷன் அருகே மேம்பாலம் பணிகள் நடந்து வருகிறது. அப்போது டூவீலரில் வந்த அவர்கள் சர்வீஸ் சாலையில் திரும்பும் போது திடீரென நிலைதடுமாறி அருகில் இருந்த தடுப்பு சுவரில் மோதினர். இதில் அவர்கள் இருவரும் தூக்கி வீசப்பட்டு உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தனர்.
அப்போது அவ்வழியாக வந்த மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ இருவரையும் மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியில் ராமகிருஷ்ணன் உயிரிழந்துள்ளார். இதனையடுத்து பேச்சிராஜ் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று அவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் குறித்து புதுக்கோட்டை காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சாலை விபத்தில் இரண்டு விஏஓக்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


