சென்னையில் உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த நடிகர் அபினய் இன்று காலமானார் அவருக்கு வயது 44.
நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான ‘துள்ளுவதோ இளமை’ படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமாகி பிரபலமானவர் அபினய். அதனைத்தொடர்ந்து ஓரிரு படங்களிலும் நடித்தார். விஜய்யின் ‘துப்பாக்கி’ திரைப்படத்தில் வில்லனுக்கு இவர்தான் குரல் கொடுத்திருந்தார். ஒருகட்டத்தில் படவாய்ப்புகள் இல்லாமல் போக, வருமானத்துக்கு கஷ்டப்பட்டார். தினமும் அம்மா உணவகத்தில் சாப்பிட்டு வந்தார்.இது தொடர்பான வீடியோ வைரலானது.
இந்த நிலையில், கல்லீரல் பாதிப்பால் அவதிப்பட்டு வந்த அபினய், சிகிச்சைக்கு பணமின்றி தவித்து வந்தார். சாக்லேட் பாய் போல இருந்த அபினய், மெலிந்து ஆளே தெரியாத நிலைக்கு உள்ளானார். இதற்கிடையில் சின்னத்திரை நடிகர் பாலா, அபினய்யை சந்தித்து ரூ.1 லட்சம் நிதி வழங்கினார். இதன்பின் நடிகர் தனுஷ் 5 லட்ச ரூபாய் நிதி உதவி அளித்ததாக கூறப்படுகிறது.
மேலும் அபினய்யின் மருத்துவச் செலவுகளுக்கு திரைத்துறையினர், அவரது நெருங்கிய நண்பர்கள் மற்றும் ரசிகர்கள் உதவி செய்யத் தொடங்கினர். ஆனால்,அவர் சிகிச்சை பெறுவதற்கான முழுமையான தொகை கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில், தனக்கு இன்னும் உதவி தேவைப்படுகிறது என்றுஅபினய் மீண்டும் வேண்டுகோள் விடுத்தார். இந்த நிலையில், நடிகர் அபினய், சிகிச்சை பலனின்றி இன்று பரிதாபமாக உயிரிழந்தார். இது தமிழ் திரையுலகினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


