கொள்கை ரீதியாக திமுகவை வீழ்த்த முடியாததால் தேர்தல் ஆணையம் மூலம் வீழ்த்த முயற்சி நடக்கிறது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
திமுகவின் 75வது ஆண்டையொட்டி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் அறிவுத்திருவிழா நடைபெற்றது. இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், “அறிவொளியை பரப்புவதே திமுகவின் தலையாய கடமை. இவ்விழாவிற்கு அறிவு திருவிழா என்று துணை முதல்வர் உதயநிதி பொருத்தமான பெயர் வைத்துள்ளார். திமுக உழைத்த உழைப்பு சாதாரணமானது அல்ல. வரலாறு தெரியாதவர்கள் சிலர் நம்மை மிரட்டி பார்க்கிறார்கள். இன்று சில அறிவிலிகள் திமுகவை போல் வெற்றி பெறுவோம் என்று பகல் கனவு காண்கிறார்கள்.
திமுக போல் வெற்றி பெற, திமுக போல் அறிவும், உழைப்பும் தேவை. ஒரு சூரியன், ஒரு சந்திரன் போல் ஒரு திமுக தான். இப்படி ஒரு இயக்கம் இந்த மண்ணில் தோன்ற முடியாது. ஒடுக்கு முறையில் இருந்து மக்களை மீட்ட இயக்கம் திமுக என்று ராகுல் சொல்லி இருக்கிறார். பிஹார் மாநிலத்தில் முதலமைச்சராக விரைவில் வர இருக்கிற தேஜஸ்வி யாதவ் திமுகவை வரலாறாக பார்க்கிறார். மாநில கட்சியான திமுகவை அகில இந்திய தலைவர்களும் பாராட்டி கட்டுரை எழுதியுள்ளனர். வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் மூலம் திமுகவை வீழ்த்த நினைக்கின்றனர். வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை ஏன் அவசரம் அவசரமாக நடத்த வேண்டும்?.
தேர்தல் நேரத்தில் குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் வாக்காளர் பட்டியல் திருத்த பணிகளை நடத்துக்கின்றனர். அனைத்து அரசியல் கட்சிகளும் எதிர்த்தபோதிலும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை ஏன் நடத்துகின்றனர்? கொள்கை ரீதியாக திமுகவை வீழ்த்த முடியாததால் தேர்தல் ஆணையம் மூலம் வீழ்த்த முயற்சி நடக்கிறது. களத்தில் வேலை செய்யும் திமுகவினர் போலி வாக்காளர் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். யாருடைய வாக்குரிமையும் பறிபோகாமல் திமுகவினர் களத்தில் பணியாற்ற வேண்டும்” என்றார்.


