வாரணாசியில் இருந்து 4 புதிய வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்களை பிரதமர் நரேந்திர மோடி இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார்
உத்தரப்பிரதேசத்தில் உள்ள தனது நாடாளுமன்றத் தொகுதியான வாரணாசியில் இருந்து 4 புதிய வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்களை பிரதமர் நரேந்திர மோடி இன்று (நவம்பர் 8) கொடியசைத்து தொடங்கி வைத்தார். வாரணாசி-கஜுராஹோ, லக்னோ-சஹரன்பூர், ஃபிரோஸ்பூர்-டெல்லி மற்றும் எர்ணாகுளம்-பெங்களூரு வழித்தடங்களில் இந்த ரயில்கள் இயக்கப்படும்.
இதன் பின் பிரதமர் மோடி கூறுகையில்,” இந்த வந்தே பாரத் ரயில்கள் குடிமக்களுக்கு “இணைப்பை மேம்படுத்தி அதிக வசதியை வழங்கும். வந்தே பாரத், நமோ பாரத் மற்றும் அம்ரித் பாரத் போன்ற ரயில்கள் புதிய தலைமுறை இந்திய ரயில்வேக்கு அடித்தளம் அமைக்கின்றன. வளர்ந்த நாடுகளின் பொருளாதார வளர்ச்சியில் உள்கட்டமைப்பு ஒரு முக்கிய காரணி. இந்தியாவும் வளர்ச்சிப் பாதையில் வேகமாக முன்னேறி வருகிறது” என்று அவர் கூறினார்
கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் இருந்து கர்நாடக மாநிலம் பெங்களூரு வரை செல்லும் வந்தே பாரத் ரயில் கேரளா, தமிழகம், கர்நாடகா என 3 மாநிலங்களை இணைக்கிறது. இந்த ரயில் தமிழகத்தின் கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம் வழியாக செல்கிறது. புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட எர்ணாகுளம்-பெங்களூரு வந்தே பாரத் ரயிலில் பயணித்த குழந்தைகளுக்கு மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி இனிப்புகளை வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.


