ரீல்ஸ்க்கு வந்த ஒரு கமெண்ட், கட்டிய கணவனை காதலனோடு சேர்ந்து இளம்பெண்ணை கொலைக்கு தள்ளிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் மீரட்டை சேர்ந்தவர் ராகுல். இவரது மனைவி அஞ்சலி. இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளன. இந்த நிலையில், நவம்பர் 1-ம் தேதி அக்வான்பூர் பகுதியில் ராகுலின் உடல் மூன்று தோட்டக்கள் துளைக்கப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டது. இதைப் பார்த்த கிராம மக்கள் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர்.
விலகிய மர்மம்
பரீக்ஷித்கர் காவல் நிலையம் போலீஸார், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ராகுலின் உடலைக் கைப்பற்றி விசாரணையை தொடக்கினர். முதலில் இது அடையாளம் தெரியாத நபர்களால் ராகுல் கொல்லப்பட்டதாக போலீஸார் நினைத்தனர். ஆனால், படிப்படியாக விசாரிக்க ஆரம்பித்த பின்பு தான் மர்மம் விலக ஆரம்பித்தது. இந்த கொலைக்கு காரணமே ராகுலின் மனைவி அஞ்சலி தான் என்பதை அறிந்த போலீஸார் அதிர்ச்சியடைந்தனர்.
ரீல்ஸ் வீடியோக்கள்
ராகுலின் மனைவி அஞ்சலி சமூக வலைதளங்களில் ரீல்ஸ் தயாரித்து வெளியிடுவதில் மிகுந்த ஆர்வமுடையவராக இருந்துள்ளார். இவர் அடிக்கடி கணவர் ராகுலுடன் சேர்ந்து வீடியோக்களை வெளியிட்டுள்ளார். இந்த கணவன், மனைவி ஜோடிக்கு பெரிய வரவேற்பும் கிடைத்துள்ளது. இதனால் தனது மனைவி தயாரிக்கும் வீடியோக்களை தனது சமூக கணக்கில் ராகுல் பகிர்ந்து வந்துள்ளார். இந்த நிலையில், ஒரு ரீல்ஸ்க்கு வந்த கமெண்ட் தான் அஞ்சலியின் வாழ்க்கையை திசை திருப்பி போட்டுள்ளது.
கமெண்ட்டால் வந்த வினை
கணவன், மனைவியான ராகுல், அஞ்சலி வெளியிட்ட ஒரு ரீல்ஸ்க்கு, நீங்கள் சேர்ந்து வீடியோ வெளியிட்டாலும், நீங்கள் ஒருவர் மட்டுமே நட்சத்திரம் அஞ்சலி என்ற கமெண்ட் அஞ்சலி மனத்திற்குள் ஒரு மாற்றத்தை உருவாக்கியுள்ளது. இதனால் ராகுல் தனக்கு ஒரு சுமை எனக்கருதி, அவருடன் சமூக வலைதளங்களில் வெளியிடும் வீடியோ தனது இமேஜை கெடுத்து விடும் என்று நினைத்து ராகுலுடன் வீடியோ எடுப்பதை நிறுத்தி விட்டார். தன்னை மட்டும் மையமாக வைத்து ரீல்களை பதிவேற்றத் தொடங்கினார். அத்துடன் கணவனிடமிருந்து கொஞ்சம் கொஞ்சமாக விலக ஆரம்பித்தார்.
தகாத உறவு
இந்த நேரத்தில் அதே ஊரை சேர்ந்த அஜய் என்ற இளைஞரை அஞ்சலி சந்தித்துள்ளார். இந்த சந்திப்பு நட்பாக மாறியது, அந்த நட்பு அவர்களுக்குள் திருமணத்தை மீறிய உறவாக மாறியது. . ராகுல் வீட்டில் இல்லாத நேரத்தில் அஞ்சலியை சந்திக்க அஜய் வீட்டிற்கு வருவது வழக்கம். சில சமயம் இருவரும் ஓட்டல்களிலும் சந்தித்துக் கொள்வது வழக்கமானது. படிப்படியாக அவர்களின் உறவு ஆழமடைந்தது. ஒரு நாள் ராகுல் அவர்கள் இருவரையும் ஆட்சேபனைக்குரிய சூழ்நிலையில் பார்த்தார்.
சதித்திட்டம்
இந்தக் காட்சியைப் பார்த்த ராகுலுக்குப் பொறுக்கவில்லை. அஜய்யை வீட்டை விட்டு வெளியே துரத்தி விட்டு அஞ்சலியுடன் கடுமையாக சண்டையிட்டார். அஜய்யுடனான உறவை முறித்து கொள்ளாவிட்டால் போலீஸில் புகார் செய்வேன் என்று ராகுல் மனைவியை எச்சரித்துள்ளார். இதனால் ராகுலை அஞ்சலி வெறுக்கத் தொடங்கினார். அத்துடன் தனது காதலுடன் சேர்ந்து வாழ தனது கணவனை கொலை செய்யும் முழு திட்டத்தையும் அவர் அஜய்யுடன் சேர்ந்து தீட்டியுள்ளார்.
சுட்டுக்கொலை
நவம்பர் 1-ம் தேதி இரவு உங்களுடன் மிக முக்கியமான விஷயம் பேச வேண்டும் என்று ராகுலை அஜய் அழைத்துள்ளார். இதன் பேரில் போன அங்கு போன ராகுலுக்கும், அஜய்க்கும் வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ராகுல் செல்போனுக்கு ஒரு அழைப்பு வந்துள்ளது. இதனால் அந்த அழைப்பை ஏற்று ராகுல் பேசிக் கொண்டிருந்த போது மறைத்து வைத்திருந்த துப்பாக்கியால் ராகுலை மூன்று முறை அஜய் சுட்டுள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே, ராகுல் இறந்தார். அதன் பிறகு அஜய் அஞ்சலிக்கு போன் செய்து வேலை முடிந்தது என்றார்.
காட்டிக்கொடுத்த செல்போன்
இந்த கொலையை அஞ்சலி தான் செய்தார் என்பது குறித்து எஸ்எஸ்பி விபின் தடா கூறுகையில், ராகுலின் மனைவியின் தொலைபேசி எண்ணை ஆய்வு செய்தோம். கொலை நடந்த இரவில் அஞ்சலியும், அஜய்யும் தொடர்பில் இருந்த விவரங்கள் மற்றும் இருப்பிடகண்காணிப்பு தெரிய வந்தது. அஜய்யை நீம்கா கால்வாய் பாலம் அருகே போலீஸார் கைது செய்துள்ளனர். அஞ்சலி அவரது தாய் வீட்டில் பிடிபட்டார். விசாரணையில் அவர்கள் இருவரும் குற்றத்தை ஒப்புக் கொண்டனர் என்றார்.
சிறைப்பறவை
கொலைக்கு பயன்டுத்தப்பட்ட துப்பாக்கி மற்றும் மூன்று தோட்டாக்களை போலீஸார், அஜய்யிடமிருந்து மீட்டனர். சமூக ஊடகத்தில் வந்த ஒரு கமெண்ட் ஒரு குடும்பத்தையே சின்னாபின்னமாக்கியுள்ளது. ராகுலின் மூன்று சின்னஞ்சிறு குழந்தைகள் தற்போது அவரது தாத்தாவின் அரவணைப்பில் உள்ளன. சமூக வலைதள ஒளியில் தங்களை தேவதைகளாக கருதும் பெண்கள் தங்கள் குடும்பத்தை தொலைத்துவிட்டு இது போல சிறைப்பறவைகளாக மாறி விடுவதாக கிராம மக்கள் புகார் தெரிவித்தனர்.


