அதிமுகவில் இருந்து கே.ஏ.செங்கோட்டையனின் ஆதரவாளர்களான முன்னாள் எம்.பி சத்யபாமா உள்பட 14 பேர் நீக்கப்பட்டுள்ளனர்.
அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்கள் ஒன்றிணைய வேண்டும் என எடப்பாடி பழனிசாமிக்கு முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கெடு விதித்தார். இதனால் அவரது கட்சிப்பதவி அடுத்த நாளே பறிக்கப்பட்டது. ஆனாலும் கட்சி உறுப்பினராக செங்கோட்டையன் நீடித்து வந்தார்.
இந்த நிலையில், அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வத்துடன் ஒரே காரில் செங்கோட்டையன் பசும்பொன்னுக்கு சென்றார். அத்துடன் ஓபிஎஸ், டிடிவி.தினகரனுடன் ஒன்றாக சேர்ந்து தேவர் சிலைக்கு செங்கோட்டையன் மாலை அணிவித்தார். அத்துடன் சசிகலாவையும் சந்தித்து பேசினார்.
இந்த நிலையில் கட்சிக் கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டதாக செங்கோட்டையன் அதிமுகவில் இருந்து நீக்கப்படுவதாக நவம்பர் 31-ம் தேதி எடப்பாடி பழனிசாமி அதிரடியாக அறிவித்தார். தற்போது செங்கோட்டையன் ஆதரவாளர்களான அதிமுக முன்னாள் எம்.பி.யும், அதிமுக தலைமை செயற்குழு உறுப்பினருமான சத்தியபாமா, ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட பொருளாளர் கந்தவேல் முருகன், நம்பியூர் முன்னாள் ஒன்றிய செயலாளர்சுப்பிரமணியம் உள்ளிட்ட 14 பேர் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். இதனால் செங்கோட்டையன் உள்பட அவரது ஆதரவாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.


