‘த்ரிஷ்யம்’ படப்பாணியில் கணவனை கொலை செய்து சமையலறையில் புதைத்த மனைவி, அவரது காதலன் உள்ளிட்ட நான்கு பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குஜராத் மாநில, அஹமதாபத்தைச் சேர்ந்தவர் சமீர் அன்சாரி(35). இவர் கடந்த 2024-ம் ஆண்டு திடீரென காணாமல் போனார். இது தொடர்பாக அவரது குடும்பத்தினர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இது தொடர்பாக போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். ஆனால், போலீஸாருக்கு துப்பு எதுவும் கிடைக்கவில்லை. 14 மாதங்களாக சமீர் திரும்பி வருவார் என்ற அவரது குடும்பத்தினர் நம்பிக் கொண்டிருந்தனர்.
செல்போன் அழைப்பு
இந்த நிலையில், சமீர் அன்சாரியின் செல்போன் அணைத்து வைக்கப்பட்டிருந்தது. அவரது மனைவி ரூபியின் நடவடிக்கையில் போலீஸாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து அவரது செல்போனுக்கு வரும் அழைப்புகளை போலீஸார் சோதனை செய்த போது இம்ரான் என்பவர் ரூபிக்கு அடிக்கடி செல்போனில் பேசியது தெரிய வந்தது. அத்துடன் அதில் இருந்து பணப்பரிமாற்றம் நடந்தது போலீஸாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து இம்ரானை போலீஸார் பிடித்து விசாரணை நடத்திய போது அதிர்ச்சிகரமான பல தகவல்கள் வெளியானது.
காதலன் வாக்குமூலம்
இம்ரானுக்கும், ரூபிக்கும் கள்ளத் தொடர்பு இருந்துள்ளது. இதையறிந்த சமீர் அன்சாரி மனைவியை கண்டித்துள்ளார். இதனால் அவருக்கும், ரூபிக்கும் அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் தனது கணவனை கொலை செய்ய வேண்டும் என்று இம்ரானிடம் ரூபி கூறியுள்ளார். இதனையடுத்து நடந்த சம்பவம் குறித்து இம்ரான் அளித்த வாக்குமூலம் போலீஸாரை அதிர்ச்சியடைய வைத்தது. ரூபி தனது கணவருக்கு உணவில் மயக்க மருந்து கொடுத்ததால் அவர் மயக்கமடைந்துள்ளார்.
கொன்று உடல் புதைப்பு
இதையடுத்து இம்ரானும், அவரது நண்பர்கள் இருவர் ரூபி வீட்டிற்குள் நுழைந்து சமீரின் கைகளையும் கால்களையும் கட்டி, பின்னர் கத்தியால் அவரது தொண்டையில் அறுத்து கொலை செய்தனர். இதன் பின் சமீரின் உடலை துண்டு துண்டாக வெட்டி அவரது வீட்டின் சமையலையில் ஒரு பகுதியில் குழிதோண்டி புதைத்து அந்த இடத்தில் மார்பிள் கற்களைப் பதித்தது தெரிய வந்தது. இதையடுத்து அந்த இடத்தை தோண்டி சமீரின் எலும்புக்கூட்டை போலீஸார் மீட்டனர். இதையறிந்த சமீரின் குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர்.
‘த்ரிஷ்யம்’ படப்பாணி
‘த்ரிஷ்யம்’ படப்பாணியில் கணவனை கொலை செய்து வீட்டிற்குள்ளேயே மனைவி புதைத்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து சமீரின் மனைவி ரூபி, இம்ரான் மற்றும் அவரது இரண்டு நண்பர்கள் மீது போலீசார் கைது செய்துள்ளனர். கொலை, ஆதாரங்களை அழித்தல் மற்றும் சதித்திட்டம் தீட்டியதற்காக நான்கு பேர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த கொலையில் வேறு யாராவது இதில் ஈடுபட்டிருக்கலாமா என்பதை அறிய போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். எந்த ஆதாரமும் இல்லாமல் ஒரு வருடம் கழித்து ஒரு கொலை வழக்கில் கொலையாளிகளை கைது செய்த போலீஸாருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.


