மைத்துனர் மனைவியுடன் தொடர்பில் இருப்பதாக ஒருவரை கம்பத்தில் கட்டி வைத்து அடித்தே கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம், உன்னாவ் மாவட்டத்தில் உள்ள அச்சல்கஞ்ச் காவல் நிலையப் பகுதியில் நேற்று மாலை இந்த கொடூரக் கொலை நடந்துள்ளது. அச்சல்கஞ்ச் பகுதியைச் சேர்ந்தவர் நரேந்திரன். இவர் நன்னா தேவி என்பரை சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்தார். இந்த நிலையில், நேற்று மாலை நன்னாதேவியின் சகோதரர் கங்காராம், தனது மைத்துனர் நரேந்திரனை ஒரு விஷயமாக பேச வேண்டும் என்று வீட்டிற்கு அழைத்துள்ளார்.
இதனை நம்பி அவர் தனது மாமியார் வீட்டிற்கு நரேந்திரன் சென்றுள்ளார். ஏற்கெனவே அங்கு இருந்த கங்கா ராம், அவரது மனைவி பாலேஸ்வரி, சகோதரர் கமலேஷ் மற்றும் மைத்துனி நீலம் ஆகியோர் நரேந்திரனை பிடித்து முற்றத்தில் உள்ள தூணில் கட்டி வைத்து கட்டைகளால் தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் நரேந்திரன் மயக்கமடைந்தார். இதனையடுத்து அவரை மைத்துனர் கங்காராம் குடும்பத்தினர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்குள்ள மருத்துவர்கள் அவரை பரிசோதனை செய்த போது நரேந்திரன் இறந்து விட்டதாக கூறியுள்ளனர். இதனைக் கேட்டதும் கங்காராம் உள்ளிட்டோர் மருத்துவமனையில் இருந்து தப்பியோடி விட்டனர். இந்த தகவல் அறிந்த போலீஸார், நரேந்திரன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த கொலை தொடர்பாக நரேந்திரன் மனைவி நன்னா தேவி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதில் எனது சகோதரனின் மனைவியான நீலத்துடன் இரண்டு வருடங்களாக என் கணவர் தகாத உறவில் இருந்தார். இதனால் எங்கள் இரண்டு வீட்டிலுமே பிரச்னை இருந்தது. நீலத்துடன் இருந்த தொடர்பை எனது கணவர் விட மறுத்தார். தற்போது இந்த பிரச்னையால் உயிரை இழந்து விட்டார். அவரை கொலை செய்த நான்கு பேர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்.
இதுகுறித்து அச்சல்கஞ்ச் காவல் நிலைய பொறுப்பாளர் ராஜேஷ் பதக் கூறுகையில்,” கொலை செய்யப்பட்டவரின் மனைவி அளித்த புகாரின் அடிப்படையில் கங்கா ராம், கமலேஷ், பாலேஷ்வரி மற்றும் நீலம் ஆகிய நான்கு பேர் மீது கொலை மற்றும் சதித்திட்டம் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. தலைமறைவாகியுள்ள நான்கு பேரையும் தேடி வருகிறோம். நரேந்திரன் மற்றும் நீலம் செல்போன்களின் அழைப்புகளை வைத்து விசாரணை நடத்தி வருகிறோம். இது கொலைக்கு பின்னணியில் உள்ள சதித்திட்டத்தை வெளிப்படுத்தக்கூடும்” என்று கூறினார். தகாத உறவால் நடந்த கொலையால் கிராமத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


