கத்தி, கபடா வைத்து கொண்டு அரசியல் செய்வது தான் நாகரீகமான அரசியலா என்று அன்புமணிக்கு பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் உள்ள தைலாபுரத்தில் டாக்டர் ராமதாஸ் செய்தியாளர்களை இன்று சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், ” நான் சில தவறுகளைச் செய்தது உண்டு. அதில் ஒன்றுதான் அன்புமணியை மத்திய அமைச்சராக நியமித்தது, கட்சியின் தலைமை பொறுப்புக்கு கொண்டு வந்தது. நான் அமைதியாக கட்சியை நடத்தி கொண்டிருக்கும் போது அதில் பிளவு ஏற்பட்டுள்ளது என அனைவரும் நினைக்கும் வகையில் அவர்களின் செயல் அருவருக்கதக்க வகையில் இருக்கிறது. உங்கள் வளர்ப்பு சரி இல்லை என சொல்கிறார்கள். அந்த கும்பலில் உள்ளவர்கள் எல்லோருமே நான் வளர்த்த பிள்ளைகள் தான்.
என்னோடு 5 சட்டமன்ற உறுப்பினர்கள் இருந்தனர். இப்போது 2 பேர் தான் என்னோடு இருக்கிறார்கள். மீதம் 3 பேர் அன்புமணியோடு போய் விட்டார்கள். ஒரே கட்சியில் இருந்தவர்களை பிரித்து தன் பக்கம் சேர்த்து கொண்டு கத்தி, அரிவாள் போன்ற ஆயுதங்களை கொண்டு அடிதடி செய்கிறார்கள். அந்த கும்பல் இன்னும் துப்பாக்கியை தான் பயன்படுத்த வில்லை. அதையும் சீக்கிரம் பயன்படுத்திவிடுவார்கள். சேலத்தில் எம்எல்ஏ அருள் மீது தாக்குதல் நடத்தி உள்ளனர். நல்ல வேளையாக அவர் தப்பி பிழைத்துள்ளார்” என்றார்.
இதன்பின் அன்புமணி குறித்து ராமதாஸ் கூறுகையில் “உனக்கு அரசியல் செய்ய வேண்டும் என்றால் பாமக பெயரையோ, என் பெயரையோ பயன்படுத்தக் கூடாது. ஒரு புதிய கட்சியை ஆரம்பித்து கொள். அந்த கட்சிக்கு பெயர் வேண்டும் என்றால் நல்ல பொருத்தமான பெயரை நான் சொல்கிறேன். தமிழகம் அமைதி பூங்காவாக திகழ வேண்டும் என அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும், மறைந்த தலைவர்களும் விரும்பினார்கள். இப்படி கத்தி, கபடா வைத்து கொண்டு அரசியல் செய்வது தான் நாகரீகமான அரசியலா? அந்த கும்பல் செய்வதை கண்டு எந்த நிலையிலும் எதிர்வினையாற்ற கூடாது என பாமகவினருக்கு சொல்லி இருக்கிறேன்.
இனிமேல் என்னுடைய கட்சிக்காரர்கள் மீது சுண்டு விரல் பட்டாலும் அதற்கு காரணம் அன்புமணியும், அவரது மனைவி செளமியாவும் தான் காரணம். அன்புமணியும் அவருடன் இருக்கும் அந்த கும்பலும் திருந்த வேண்டும். டிசம்பர் 30-ம் தேதி சேலம் மாவட்டம் தலைவாசலில் பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ளது. அதில், யாரோடு கூட்டணி அமைப்பது என்பது குறித்து ஆலோசித்து முடிவு எடுக்கப்பட உள்ளது” என்றார்.


