பிஹாரில் இன்று வாக்களிக்க உள்ள அனைத்து வாக்காளர்களும் முழு உற்சாகத்துடன் வாக்களிக்குமாறு பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பிஹாரில் முதல் கட்டமாக 18 மாவட்டங்களில் உள்ள 121 தொகுதிகளில் இன்று தேர்தல் நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு காலை 7 மணி முதலே வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது. இந்த முதல் கட்டத் தேர்தலில் 1,314 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இவர்களில் 1,191 ஆண்கள், 122 பெண்கள் மற்றும் ஒரு திருநங்கை வேட்பாளர்கள் அடங்குவர்.
முதல் கட்ட வாக்குப்பதிவில் சுமார் 3.75 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். இதற்காக 45,341 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இன்று காலையில் 7 மணியளவில் வாக்குப்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மாலை 5 மணிக்கு வரிசையில் நிற்கும் வாக்காளர்கள் அனைவரும் வாக்களிக்க அனுமதிக்கப்படுவார்கள் என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் பிஹாரில் வாக்களிக்க உள்ள வாக்காளர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக அவரது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,” பிஹாரில் இன்று ஜனநாயக கொண்டாட்டத்தின் முதல் கட்டம். இந்த தேர்தலில் வாக்களிக்க உள்ள அனைத்து வாக்காளர்களும் முழு உற்சாகத்துடன் வாக்களிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். இந்த சந்தர்ப்பத்தில், முதல் முறையாக வாக்களிக்கும் எனது இளம் நண்பர்கள் அனைவருக்கும் எனது சிறப்பு வாழ்த்துகள்” என்று தெரிவித்துள்ளார்.


