தமிழக வெற்றிக் கழகத்தின் சிறப்பு பொதுக்குழு கூட்டம் மாமல்லபுரத்தில் இன்று நடைபெறுகிறது.
கரூரில் செப்டம்பர் 27-ம் தேதி தவெக தலைவர் விஜய் பங்கேற்ற மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில், கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.20 லட்சம் நிவாரணம் வழங்கிய விஜய், அவர்களை மாமல்லபுரத்திற்கு நேரில் அழைத்து ஆறுதல் கூறினார்.
இதன் பின் கட்சியின் அன்றாடப்பணிகளை மேற்கொள்ள பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் உள்பட 28 பேர் கொண்ட நிர்வாகக்குழுவை நியமித்தார்.மேலும், தவெக சார்பில் சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள 234 சட்டமன்ற தொகுதிகளிலும் வழக்கறிஞர்கள் நியமனம் செய்யப்பட்டனர். இதன் தொடர்ச்சியாக தொண்டரணி, மகளிரணி, இளைஞரணி, மாணவரணிக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டனர்.
மேலும் தவெக தலைவர் விஜய் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் கூட்ட மேலாண்மையை கடைப்பிடித்து விரும்பத்தகாத நிகழ்வுகளைத் தடுப்பதற்காக 2,500 இளைஞர்களை கொண்ட மக்கள் பாதுகாப்பு படை அமைக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு பனையூரில் உள்ள தலைமை அலுவலகத்தில் ஓய்வுபெற்ற காவல்துறை ஐ.ஜி. ரவிக்குமார் மற்றும் ஓய்வுபெற்ற போலீஸார் பயிற்சி அளித்தனர்.
இந்த சூழ்நிலையில் சட்டமன்ற தேர்தலில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விவாதக்க தவெக சிறப்பு பொதுக்குழு கூட்டம் மாமல்லபுரத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் இன்று நடக்கிறது. இதில் சுமார் 2 ஆயிரம் பேர் பங்கேற்கின்றனர். கரூர் சம்பவத்துக்கு பிறகு விஜய் பொதுவெளியில் நிகழ்ச்சிகளில் எதுவும் பங்கேற்காமல் இருந்தார். இந்த கூட்டத்தில் விஜய் சிறப்புரையாற்ற உள்ளார். இந்த கூட்டத்திற்கு அழைப்பு கடிதம் மற்றும் தலைமைக்கழக அடையாள அட்டை வைத்திருக்கும் பொதுக்குழு உறுப்பினர்கள் மட்டுமே கலந்துகொள்ள அனுமதிக்கப்படுவார்கள். அடையாள அட்டையில் பெயர் உள்ளவர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும். என்பது உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது.


