நேபாளத்தில் உள்ள யாலுங் ரி சிகரத்தில் ஏற்பட்ட பயங்கர பனிச்சரிவில் சிக்கி 7 மலையேற்ற வீரர்கள் உயிரிழந்தனர்.
நேபாளத்தின் டோலாகா மாவட்டத்தில் உள்ள யாலுங் ரி சிகரத்தில் மலையேற்ற சாசகத்திற்காக பல்வேறு வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள் வருவது வழக்கம். சுமார் 5,630 மீட்டர் உயரம் கொண்ட யாலுங் ரி சிகரத்தின் அடிப்பகுதி முகாமில் (4,900 மீட்டர் உயரத்தில்) திடீரென பனிச்சரிவு ஏற்பட்டது. அப்போது அங்கு தங்கியிருந்தவர்கள் பனியில் புதையுண்டனர்.
இதில் 7 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். அதில் மூன்று பேர் அமெரிக்காவைச் சேர்ந்தவர்கள், ஒருவர் கனடா, மற்றொருவர் இத்தாலி நாட்டைச் சேர்ந்தவர் என்று தெரிய வந்தது. இதில் நேபாளத்தைச் சேர்ந்த இரண்டு வழிகாட்டிகளும் உயிரிழந்துள்ளனர்.
இந்தச் சம்பவத்தில் மேலும் நான்கு பேர் காயமடைந்துள்ளனர். நான்கு பேர் காணாமல் போனதாக தகவல் வெளியாகியுள்ளது. மோசமான வானிலை காரணமாக மீட்புப் பணிகளுக்கு ஹெலிகாப்டர் மூலம் செல்ல முடியவில்லை. நிலத்தின் வழியாக மீட்புக் குழுக்கள் சம்பவ இடத்தை அடைந்தன. பனிச்சரிவில் சிக்கி காயமடைந்தவர்கள் தலைநகர் காத்மாண்டுவிற்குச் சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
காணாமல் போனவர்களைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதற்கிடையே, மேற்கு நேபாளத்தில் உள்ள பன்பாரி மலையில், கடந்த வாரம் கனமழையின்போது காணாமல் போன இரண்டு இத்தாலிய மலையேற்ற வீரர்கள், கூடாரத்தில் இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டனர்.


