எடப்பாடி பழனிசாமி தலைமை தாங்குவது உண்மையான அதிமுக அல்ல என்று தேர்தல் ஆணையத்திற்கு முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கடிதம் எழுதியுள்ளார்.
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. இதற்கான வேலைகளில் அனைத்து கட்சிகளும் தீவிர காட்டி வருகின்றன. ஆனால், அதிமுகவில் நடந்து வரும் உட்கட்சி பூசல் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. அதிமுக ஒன்றிணைய வேண்டும் என்று குரல் கொடுத்த அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனின் கட்சி பதவிகளை எடப்பாடி பழனிசாமி பறித்தார்.
இந்த நிலையில், அக்டோபர் 30-ம் தேதி பசும்பொன்னில் நடைபெற்ற தேவர் ஜெயந்தி குருபூஜையில் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம், டி.டி.வி.தினகரன் ஆகியோருடன் செங்கோட்டையன் சந்தித்து பேசியதுடன் செய்தியாளர்களையும் சந்தித்தார். அத்துடன் சசிகலாவையும் சந்தித்து பேசினார். இதனால் அதிமுகவில் இருந்து செங்கோட்டையன் அதிரடியாக நீக்கப்பட்டார். இதனால் நீதிமன்றம் செல்வேன் என்று செங்கோட்டையன் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், இந்திய தேர்தல் ஆணையத்திற்கு செங்கோட்டையன் எழுத்துப்பூர்வமாக கடிதம் எழுதியுள்ளார். அதில், நிலுவையில் இருக்கும் அதிமுகவின் இரட்டை இலை சின்ன விவகாரத்தில் தலையிட்டு உடனடியாக விசாரணை நடத்த கோரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக ஏற்கெனவே அளிக்கப்பட்டுள்ள மனுவுடன் தன்னுடைய மனுவையும் இணைத்து பரிசீலிக்க வேண்டும். தற்போதைய எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக உண்மையான அதிமுக இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கட்சியின் உண்மை நிலையை நிரூபிக்க கால அவகாசம் வேண்டும் என்றும் செங்கோட்டையன் தரப்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இதனால் அதிமுகவில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.


