கோவையில் மாணவியை தூக்கிச் சென்று கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்த மூன்று பேரை போலீஸார் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரையைச் சேர்ந்த 20 வயது மாணவி, கோவை மாநகரில் உள்ள தனியார் கல்லுாரியில் முதுகலை முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இவரது ஆண் நண்பர், கோவை ஒண்டிபுதூரைச் சேர்ந்த 25 வயது இளைஞருடன் நேற்று முன்தினம் இரவு 11 மணியளவில் விமான நிலையத்தின் பின்புறம் பிருந்தாவன் நகர் பகுதியில் உள்ள காலி மைதானத்தில் காரில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். மாணவியின் ஆண் நண்பர் பைக் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார்.
மாணவி பலாத்காரம்
அப்போது அங்கு போதையில் வந்த மூன்று பேர், கார் கதவை தட்டி, இருவரையும் வெளியே வருமாறு அழைத்தனர். அச்சமடைந்த இருவரும், வெளியே வர மறுத்தனர். இதையடுத்து, மூவரில் ஒருவர் காரின் முன்பக்க கண்ணாடியை அரிவாளால் அடித்து உடைத்து உள்ளார். இதனைத் தொடர்ந்து, காரின் கதவு கண்ணாடியை உடைத்தனர்.
பின், காரில் இருந்த இளைஞரை கடுமையாக தாக்கி, அரிவாளால் வெட்டினர். அதில், அவருக்கு தலை மற்றும் காதின் அருகே காயம் ஏற்பட்டதை அடுத்து, மயங்கி விழுந்தார் இதன் பின் அந்த மாணவியை வலுக்கட்டாயமாக மூன்று பேர் காரில் இருந்து இழுத்துச் சென்று அருகே உள்ள புதர்ச்செடி அருகே வைத்துபாலியல் வன்கொடுமை செய்தனர். பின்னர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.
மருத்துவமனையில் அனுமதி
நேற்று அதிகாலை சுயநினைவு திரும்பிய அந்த இளைஞர் உடனடியாக கோவை மாநகர காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார். பீளமேடு போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரித்தனர். போலீஸாரும் அந்த இளைஞரும் அந்த இளம்பெண்ணை தேடினர் .அப்பொழுது அருகே உள்ள புதர்ச் செடி அருகே உடலில் ஆடைகளின்றி நிர்வாணமாக கிடந்த மாணவியை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
7 தனிப்படைகள்
அதேபோல் அந்த இளைஞரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்திற்கு அதிமுக, பாஜக, தவெக, பாமக உள்ளிட்ட கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன. இன்று (நவம்பர் 4) அதிமுக, தவெக உள்ளிட்ட கட்சிகள் கோவையில் ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளன. இந்த நிலையில், குற்றவாளிகளைப் பிடிக்க 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
போலீஸ் மீது தாக்குதல்
இந்த சம்பவத்தில் தொடர்புடைய மூன்று பேரும் துடியலூர் வெள்ளக்கிணறு பட்டத்தரசி அம்மன் கோயில் அருகே பதுங்கியிருப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அங்கு சென்ற போலீஸார் அவர்களைப் பிடிக்க முயன்ற போது மறைத்து வைத்திருந்த அரிவாளால் அவர்கள் தாக்குதல் நடத்தினர். இதில் சந்திரசேகர் என்ற போலீஸ்காரருக்கு மணிக்கட்டில் வெட்டு விழுந்தது. இதையடுத்து குற்றவாளிகள் மூவரும் அங்கிருந்து தப்பியோடினர்.
துப்பாக்கிச்சூடு
அப்போது பீளமேடு காவல் ஆய்வாளர் அர்ஜுன், சரவணம்பட்டி காவல் ஆய்வாளர் ஞானசேகரன் ஆகியோர் தப்பியோடிய குற்றவாளிகள் மீது துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் இருவருக்கு இரண்டு கால்களிலும், மற்றொருவருக்கு ஒரு காலில் குண்டு பாய்ந்தது. இதனால் அவர்கள் கீழே விழுந்தனர். அவர்களைப் பிடித்து போலீஸார் விசாரணை நடத்தினர்.
அப்போது அவர்கள் மூவரும் சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்தது. மேலும் அவர்கள் குணா என்ற தவசி, சதீஷ் என்ற கருப்பசாமி, கார்த்திக் என்ற காளீஸ்வரன் என்பதும் தெரியவந்தது. இவர்கள் மூவரும் இருகூர் பகுதியில் வீடு எடுத்து கட்டிட வேலை பார்த்து வந்துள்ளனர். இதில் கருப்பசாமி, காளீஸ்வரன் ஆகிய இருவரும் அண்ணன், தம்பி என்ற தகவல் வெளியாகியுள்ளது.
கொலை வழக்கு
இவர்கள் மீது ஏற்கெனவே ஒரு கொலை வழக்கு, வழிப்பறி, அடிதடி உள்ளிட்ட பல்வேறு வழக்குள் இருப்பது தெரிய வந்தது. துப்பாக்கிச் சூட்டில் குண்டு பாய்ந்த மூன்று பேருக்கும் கோவை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதே போல குற்றவாளிகளால் வெட்டப்பட்டு காயமடைந்த போலீஸ்காரர் சந்திரசேகர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மாணவியை தூக்கிச் சென்று கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்த மூன்று பேரும் நள்ளிரவில் போலீஸாரால் துப்பாக்கியால் சுட்டுப் பிடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


