இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 35 தமிழக மீனவர்களை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக வெற்றிக் கழக தலைவர் நடிகர் விஜய் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “தமிழகம் மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த நம் மீனவச் சகோதரர்கள் 35 பேர், இலங்கைக் கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்களுக்குச் சொந்தமான மூன்று விசைப்படகுகள் மற்றும் ஒரு நாட்டுப் படகு பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வந்திருப்பது மன வேதனையை அளிக்கிறது.
கைது செய்யப்பட்டுள்ள நம் மீனவச் சகோதரர்கள் 35 பேரையும் உடனடியாக விடுவிக்க வேண்டும். அவர்களது படகுகளையும் மீட்டுத்தர வேண்டும். மற்ற மாநில மீனவர்கள் மீது காட்டும் அக்கறையைப் போலவே எங்கள் மீனவர்கள் மீதும் காட்டி, இதற்கான நடவடிக்கைகளை ஒன்றிய அரசு தாமதமின்றி உடனடியாக எடுக்க வேண்டும். ஒன்றிய அரசுக்கு உரிய அழுத்தத்தைத் தமிழக அரசும் தாமதிக்காமல், உண்மையாகத் தர வேண்டும். இனி இதுபோல நடக்காமல் இருக்க, இதற்கு ஒரு நிரந்தரத் தீர்வை ஒன்றிய அரசும் தமிழக அரசும் காண வேண்டும் எனத் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பாக அழுத்தமாக வலியுறுத்துகிறேன்.” என்று பதிவிட்டுள்ளார்.


