டூவீலரை முந்த முயன்ற கிராவல் மண் ஏற்றிச் சென்ற டிப்பர் லாரி அரசு பேருந்து மீது மோதியதில் 24 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
தெலங்கானா மாநிலம், ரங்கா ரெட்டி மாவட்டத்தில் பயணிகள் 70 பேருடன் அரசு பேருந்து இன்று காலை சென்று கொண்டிருந்தது. விகாராபாத்-ஹைதராபாத் சாலையில் காலை 7.30 மணியளவில் டூவீலரை முந்த முயன்ற கிராவல் மண் ஏற்றி வந்த டிப்பர் லாரி, அரசு பேருந்து மீது மோதியது. இதனால் பேருந்தின் முன்பகுதி முழுவதும் நொறுங்கியது. அத்துடன் கிராவல் மண், பேருந்தில் கொட்டியது.
இதைப் பார்த்த அப்பகுதி மக்கள் உடனடியாக மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். அவர்களுடன் போலீஸாரும், மீட்புத்துறையினரும் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். ஜேசிபி இயந்திரங்கள் மூலம் விபத்தில் காயமடைந்தவர்கள் மீட்கும் பணி தொடர்ந்தது. இந்த விபத்தில் சம்பவ இடத்தில் மூன்று மாத பெண் குழந்தை உள்பட 17 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், படுகாயமடைந்தவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி 7 பேர் உயிரிழந்தனர்.
இந்த விபத்தால் செவெல்லா – விகாராபாத் சாலையில் பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இந்த விபத்து குறித்து போலீஸார் கூறுகையில்,” ரங்கா ரெட்டி மாவட்டத்தில் செவெல்லா போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்குட்பட்ட கானாபூர் கேட் அருகே அரசு பேருந்து மீது லாரி மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது” என தெரிவித்தனர்.


