இந்தியாவின் அசுத்தமான 10 நகரங்களின் பட்டியலில் மதுரை முதலிடம் பிடித்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய அரசின் ஸ்வச் சர்வேக்ஷன் அமைப்பு ஒவ்வொரு ஆண்டும் நகர மற்றும் கிராப்புற தூய்மையை ஆய்வு செய்து அதன்படி வருடாந்திர ஆய்வு அறிக்கையை வெளியிடும். இதன்படி 2025-ம் ஆண்டிற்கான அறிக்கையை வெளியிட்டுள்ளது. கழிவு மேலாண்மை மற்றும் பொது தூய்மை போன்றவற்றின் அடிப்படையில் இந்தப் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.
இந்த பட்டியலில் தமிழ்நாட்டில் உள்ள மதுரை 4,823 புள்ளிகளுடன் நாட்டின் மிகவும் அசுத்தமான நகரமாக தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் சென்னை 6,822 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்திலும், பெங்களூரு 6,842 புள்ளிகளுடன் ஐந்தாவது இடத்திலும் உள்ளன. பட்டியலில் 2வது இடத்தில் லூதியானா, 4வது இடத்தில ராஞ்சி, 6,842 புள்ளிகளுடன் 5வது இடத்தில் பெங்களூரு, 6வது இடத்தில் தன்பாத், 7வது இடத்தில் பரிதாபத், 8வது இடத்தில் 7,419 புள்ளிகளுடன் மும்பை, 9வது இடத்தில் ஸ்ரீ நகர், 10 வது இடத்தில் 7,920 புள்ளிகளுடன் தலைநகர் டெல்லி இடம்பெற்றுள்ளது.
இந்த அறிக்கையின்படி, திட்டமிடப்படாத நகர்ப்புற மேம்பாடு, கழிவுகளை அகற்றுதலில் திறமையின்மை மற்றும் குடிமக்களின் அலட்சியம் ஆகியவை முக்கிய சவால்களாக இந்த ஆண்டு பட்டியலில் அடையாளம் காணப்பட்டுள்ளன. இதில் மகிழ்ச்சியான விஷயம் இந்தூர், சூரத் மற்றும் நவி மும்பை ஆகியவை இந்தியாவின் தூய்மையான நகரங்களாக உருவெடுத்துள்ளன. அகமதாபாத், போபால், லக்னோ, ராய்ப்பூர் மற்றும் ஜபல்பூர் போன்ற நகரங்களும் தூய்மை பட்டியலில் இடம் பெற்றுள்ளன.


