ஐசிசி மகளிர் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில், இந்திய மகளிர் கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவை 52 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது.அந்த அணிக்கு பிரதமர் மோடி, எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்பட பலர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
இறுதிப்போட்டி
மகாராஷ்டிரா மாநிலம், மும்பையின் புறநகர் பகுதியான நவி மும்பையில் ஐசிசி மகளிர் உலகக் கோப்பை இறுதிப்போட்டி நேற்று நடைபெற்றது. டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணியின் கேப்டன் லாரா வால்வார்ட் பந்துவீச்சை தேர்வு செய்தார்ர். அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 298 ரன்கள் குவித்தது. இதில் இந்திய அணியில் ஷபாலி வர்மா 87 ரன்கள், தீப்தி சர்மா 58 ரன்களும், ஸ்மிருதி மந்தனா 45 ரன்களும் விளாசினர். தென்னாப்பிரிக்க அணி சார்பில் அயபோங்க காக்கா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதனை தொடர்ந்து 299 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற கடின இலக்கை நோக்கி தென்னாப்பிரிக்கா களமிறங்கியது.
இந்தியா வெற்றி
தென்னப்பிரிக்கா அணித் தலைவர் லாரா வோல்வார்ட் அற்புதமான சதம் அடித்து (98 பந்துகளில் 101 ரன்கள்) வெற்றிக்காகப் போராடினார். ஆனால், தீப்தி ஷர்மாவின் சுழல் இந்தியாவை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றது. வோல்வார்ட் மற்றும் சோலே ட்ரையன் ஆகியோரின் விக்கெட்டுகளை ஒரே ஓவரில் கைப்பற்றி தென்னாப்பிரிக்காவின் சரிவுக்குக் காரணமானார் 39 ரன்களை கொடுத்து 5 விக்கெட்டுகளை தீப்தி சாய்த்ததால் தென்னாப்பிரிக்கா அணி 45.3 ஓவர்களில் 246 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
ரூ.125 கோடி பரிசுத்தொகை
உலகக் கோப்பையை முதல் முறையாக வென்று கோப்பையை கைப்பற்றிய இந்திய அணி வீராங்கனைகளுக்கு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) ஆடவர் அணிக்கு நிகராக 125 கோடி ரூபாய் பரிசுத் தொகையை அறிவித்துள்ளது. இறுதிப் போட்டியில் 87 ரன்கள் அடித்து, 2 விக்கெட்டுகளையும் வீழ்த்திய ஷஃபாலி வர்மா, ஆட்ட நாயகியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும், இத்தொடர் முழுவதும் பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் அசத்திய தீப்தி ஷர்மா, தொடர் நாயகி விருதை வென்றார். அவர் இத்தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியதோடு, மூன்று அரை சதங்களையும் அடித்திருந்தார்.
வரலாற்று சாதனை
கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் தலைமையில் இந்திய அணி இந்த மகத்தான வெற்றியைப் பதிவு செய்துள்ளது. கடந்த 2005 மற்றும் 2017 ஆம் ஆண்டுகளில் இறுதிப் போட்டி வரை சென்று கோப்பையை இழந்த இந்திய அணி இந்த முறை உலகக்கோப்பையை கைப்பற்றியது மைல்கல்லாக மாறியுள்ளது. அத்துடன் ஆசிய கண்டத்தில் இருந்து உலகக் கோப்பை வென்ற முதல் மகளிர் அணி என்ற வரலாற்று சாதனையை இந்தியா படைத்துள்ளது.
பிரதமர் வாழ்த்து
மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் சாம்பியனான இந்திய அணிக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். அவரது எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், “உலகக் கோப்பையை வென்ற இந்திய அணிக்கு வாழ்த்துகள். இறுதிப் போட்டியில் வீராங்கனைகள் காட்டிய நுணுக்கம், தண்னம்பிக்கை, பாராட்டுக்குரியது.உலகக் கோப்பை முழு தொடரிலும் இந்திய வீராங்கனைகள் ஒருமித்த ஒத்துழைப்பு சிறப்பாக எதிரொலித்தது. எதிர்கால பெண் வீராங்கனைகளுக்கும் ஊக்கம் தரும் வெற்றியை இந்திய மகளிர் அணி நிகழ்த்தியுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
ராகுல் வாழ்த்து
இந்த நிலையில் மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், ” நமது பெண்கள் அணி வரலாறு படைத்து, பில்லியன் கணக்கான இதயங்களைத் தொட்டுவிட்டனர். உங்கள் வீரம், மனோதிடம் மற்றும் நேர்த்தியான ஆட்டம் இந்தியாவுக்குப் புகழைக் கொண்டு வந்துள்ளதுடன், எண்ணற்ற இளம் பெண்களை அச்சமின்றி கனவு காணவும் ஊக்கப்படுத்தியுள்ளது. நீங்கள் கோப்பையை மட்டும் தூக்கவில்லை; தேசத்தின் உணர்வுகளையே தூக்கி நிறுத்தியுள்ளீர்கள்.ஜெய் ஹிந்த் ” என்று தெரிவித்துள்ளார்.
மு.க.ஸ்டாலின் வாழ்த்து
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், “அடுத்த தலைமுறையினரை ஊக்குவிக்கும் வரலாற்று வெற்றியை இந்திய மகளிர் அணி பெற்றுள்ளது. இந்திய அணி பெற்ற தனித்துவமான வெற்றியை பெற்றுள்ளது. இந்திய அணியின் ஒருமித்த செயல்பாடே இந்த வெற்ற்க்கு காரணம்” என்று பதிவிட்டுள்ளார். தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட அரசியல் தலைவர்களும் இந்திய அணிக்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.


