பாஜகவில் நான் ஒரு தொண்டனாக இருக்கிறேன்; பிடித்திருந்தால் இருக்கப் போகிறேன்; பிடிக்கவில்லை என்றால் கிளம்பப் போகிறேன் என்று அக்கட்சியின் முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
தமிழ்நாடு பாஜக மாநில தலைவராக இருந்த அண்ணாமலைக்கும், அதிமுகவினருக்கும் ஏழாம் பொருத்தம் தான். அதிமுகவை மட்டுமின்றி அக்கட்சியின் பொதுச்செயலாளராக இருந்த ஜெயலலிதாவை அண்ணாமலை கடுமையாக விமர்சனம் செய்தார். தவழ்ந்து சென்று எடப்பாடி பழனிசாமி முதலமைச்சர் பதவி பெற்றார் என்று அண்ணாமலை விமர்சித்தார். இதனால் பாஜகவிற்கும், அதிமுகவிற்கும் முட்டல், மோதல் துவங்கியது.
அதிமுகவுடன் எப்படியாவது கூட்டணி அமைக்க வேண்டும் என்று முயற்சி செய்த பாஜக தலைமைக்கு அண்ணாமலையின் தடாலடி பேச்சு பெரிய சிக்கலை கொடுத்தது. இதையடுத்து அண்ணாமலையை பாஜக மாநில தலைவர் பதவியில் இருந்து பாஜக தலைமை நீக்கியது. அவருக்கு பதில் முன்னாள் அதிமுக அமைச்சரும், பாஜக சட்டமன்ற குழு தலைவருமான நயினார் நாகேந்திரனை அந்த பொறுப்பிற்கு கொண்டு வந்தது. இந்த நிலையில், நான் அதிமுகவை பற்றி பேசவில்லை என்றாலும அக்கட்சியின் எத்தனையோ தலைவர்கள் என்னைத் திட்டிக்கொண்டு இருக்கின்றனர் என்று அண்ணாமலை குறைபட்டுள்ளார்.
கோவையில் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,” நகராட்சி நிர்வாகத் துறையில் 888 கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளதாக, ஆதாரங்களுடன் 232 பக்க கடிதத்தை, தமிழக காவல்துறை தலைவருக்கு அமலாக்கத்துறை அனுப்பியுள்ளது. நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர்கள் வீடுகளில் நடந்த ரெய்டுகளில் கிடைத்த ஆவணங்களின்படி, இந்த புகார் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், தமிழக போலீஸார் வழக்குப்பதிவு செய்ய மறுக்கின்றனர். தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் தலையிட்டு, எப்ஐஆர் பதிவு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழ்நாட்டில் நெல் கொள்முதலுக்கான லாரி கான்ட்ராக்டில், 160 கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளது. இது பற்றி வாய் திறக்காத முதல்வர் ஸ்டாலின், பிரதமர் மோடி பற்றி தவறான விமர்சனம் செய்து வருகிறார். தமிழகத்தில் மோடியும், அமித் ஷாவும் துாய அரசியலை கொடுப்பார்கள் என்ற எதிர்பார்ப்போடு அரசியலில் பயணிக்கிறேன். தமிழகத்தில் நல்ல அரசியல் கூட்டணி அமைய, இன்னும் காலம் இருக்கிறது. நான் ஒரு தொண்டனாக இருக்கிறேன்; பிடித்திருந்தால் இருக்கப் போகிறேன்; பிடிக்கவில்லை என்றால் கிளம்பப் போகிறேன்.
ஆனாலும், பிரதமர் மோடி மீது நான் வைத்துள்ள நம்பிக்கை, இம்மியளவும் குறையாது . சில சமயம், தலைவர்கள் சொல்வதால், மனசாட்சிக்கு எதிராக கூட பேசுகிறேன். இன்றைக்கும் நான் அதிமுகவை பற்றி பேசவில்லை. ஆனால், அக்கட்சியைச் சேர்ந்த எத்தனையோ தலைவர்கள், என்னை திட்டிக் கொண்டு தான் உள்ளனர். அமித்ஷாவிடம் கொடுத்த வார்த்தைக்காக அமைதியாக உள்ளேன்” என்று கூறியுள்ளார். திடீரென அண்ணாமலை விரக்தியாக பேசியுள்ளது பாஜகவினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


