திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் ஐப்பசி மாத பவுர்ணமி தினத்தில் பக்தர்கள் கிரிவலம் செல்லும் நேரத்தை கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோயில் உள்ளது. இந்த கோயில், பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்குகிறது. கோயிலின் பின்புறம் உள்ள அண்ணாமலை என்று பக்தர்களால் அழைக்கப்படும் மலையைச் சுற்றியுள்ள 14 கிலோ மீட்டர் தொலைவு கொண்ட கிரிவலப்பாதையில் பவுர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்கின்றனர்.
இந்த நிலையில் ஐப்பசி மாத பவுர்ணமி நவம்பர் 4-ம் தேதி இரவு 9.43 மணிக்கு தொடங்கி நவம்பர் 5-ம் தேதி இரவு 7.27 மணிக்கு நிறைவு பெறுகிறது. இந்த நேரத்தில் 14 கிலோ மீட்டர் தூரம் உள்ள அண்ணாமலையை பக்தர்கள் வலம் வரலாம் என அருணாசலேஸ்வரர் கோயில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பவுர்ணமியன்று திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல பல லட்சம் பக்தர்கள் வருகை தருவார்கள் என்பதால் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் பக்தர்களுக்கு அடிப்படை வசதிகள் மேற்கொள்ளும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.


