காற்றின் திசையில் ஏற்படும் மாற்றம் காரணமாக இன்று சென்னையில் முந்தைய காலங்களில் இல்லாத வகையில் வெப்பம் பதிவாகும் என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரிதீப் ஜான் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில்,” வழக்கமாக வடகிழக்குப் பருவமழை தீவிரமாக இருக்க வேண்டிய நவம்பர் மாதத் தொடக்கத்திலேயே, தமிழ்நாட்டில் வெப்பநிலை நேர்மாராக உயர்ந்து காணப்படுகிறது. காற்றின் திசையில் ஏற்பட்ட மாற்றமே இந்த அதிக வெப்பத்திற்குக் காரணம். சென்னையில் இன்று அதிகபட்சமாக 35.5 செல்ஸியஸ் வெப்பம் பதிவாகும் என கணிக்கப்பட்டுள்ளது. இது முந்தைய காலங்களில் நவம்பர் 1 அன்று இல்லாத இல்லாத சாதனை அளவாகும்.
வெப்பநிலை உயர்ந்தபோதிலும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. அதன்படி, நவம்பர் 3-ம் தேதி முதல் 6-ம் தேதி வரை மாலை அல்லது இரவு நேரங்களில் சென்னை உட்பட தமிழ்நாட்டில் பல இடங்களில் இடி மின்னலுடன் மழை பெய்யும். மேற்கு திசைக் காற்று மற்றும் வெப்பமான வானிலை காரணமாக நிகழும் அரிதான வெப்பச்சலன இடிமழையாக அது இருக்கும்” என்றார்.


