சிறு பட்ஜெட் படங்களுக்கு சிறிய அளவு நிகழ்ச்சி நடந்துவது நல்லது என்றும், பெரிய அரங்குகளில் நடத்தி காசை கரியாக்காமல் இருப்பது சாலச் சிறந்தது என்று நடிகை ஷகீலா கூறியுள்ளார்.
“பகல் கனவு” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை வளசரவாக்கத்தில் உள்ள ஏ.வி.கே அரங்கத்தில் நடைபெற்றது.
விழாவில் தயாரிப்பாளர் ஆர்.கே. அன்பழகன், நடிகை ஷகிலா, நடிகர் கராத்தே ராஜா, படத்தில் பணியாற்றிய கலைஞர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அடுத்த வாரம் வெளியீடு!
இப்படத்தை இயக்கி, தயாரித்த ஃபைசல் ராஜ், படத்தில் நாயகனாகவும் நடித்துள்ளார். இத்திரைப்படம் அடுத்த வாரம் வெள்ளிக்கிழமை முதல் தமிழ்நாடு மட்டுமல்லாமல், கேரளா மற்றும் கர்நாடகா மாநிலங்களிலும் வெளியாகிறது. Seventh Studio கண்ணன் இப்படத்தை வெளியிடுகிறார்.
பிறகுதான் தயாரிப்பாளராக வேண்டும்
விழாவில், தமிழ்நாடு திரைப்பட சிறு தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவர் ஆர்.கே அழகப்பன் பேசியதாவது, “படத்தின் நாயகன், இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் என மூன்று பொறுப்புகளையும் ‘ஃபைசல் ராஜ்’ ஒரே நேரத்தில் ஏற்றதால், அவர் உடல் மெலிந்துவிட்டார். முதலில் ஒரு பணியில் (ஹீரோ அல்லது இயக்குனர்) மட்டும் கவனம் செலுத்தி, அதில் ஜெயித்த பிறகு அடுத்து தயாரிப்பாளர் பொறுப்பை எடுக்க வேண்டும் என ஹீரோவுக்கு ஆலோசனை கூறினார்.
விளம்பரம் செய்தாலும், வசூல் இல்லை
புதிய திரைப்படங்கள் வெளியாகும் போது திரையரங்குகளில் வசூல் வருவதில்லை. விளம்பரம் உள்ளிட்ட அனைத்துச் செலவுகளையும் செய்து படம் திரையரங்கிற்கு வந்தாலும், சில சமயங்களில் 10 பேர் கூடப் பார்க்க வருவதில்லை. இதனால் திரையரங்கில் வாடகை, மின்சாரக் கட்டணம் கூடச் சம்பாதிக்க முடிவதில்லை.
திருமண மண்டபங்கள் இனி தியேட்டர்கள்
இந்தச் சிக்கலைச் சமாளிக்க ஒரு புதிய திட்டத்தை கொண்டு வருகிறோம். அதற்கான பணிகள் நடைபெற்று கொண்டு இருக்கின்றன. தமிழ்நாட்டில் உள்ள சுமார் 10,000 திருமண மண்டபங்களுடன் பேசி, திருமணங்கள் இல்லாத நாட்களில் அங்கு திரைப்படங்களைத் திரையிட ஏற்பாடு செய்திருப்பதாகக் கூறினார். அது தொடர்பான செயல்பாடுகள் நடைபெற்று கொண்டு இருக்கின்றன.
டிக்கெட் விலை குறைவு:-
இத்திட்டத்தின் கீழ், ஏசி உள்ள டிக்கெட்டுக்கு ₹75-ம், சாதாரண டிக்கெட்டுக்கு ₹50-ம் நிர்ணயம் செய்யப் பேச்சுவார்த்தை நடந்துள்ளது. மேலும், வெளியில் இருந்து ஸ்நாக்ஸ் கொண்டு வரலாம். பைக்குக்கு ₹10 கட்டணம் என்ற மாதிரியான முடிவுகளுடன் பேச்சு வார்த்தை நடைபெறுகிறது.
இந்தத் திட்டம் வெற்றி பெற்றால், வாரத்திற்குச் சுமார் ₹3 கோடி ரூபாய் வசூல் ஈட்ட முடியும் என்கிறார். இது ஜிஎஸ்டி கட்டணங்களைப் போக தயாரிப்பாளர்களை வாழ வைக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

நடிகை ஷகீலா-வின் கருத்து
விழாவில் நடிகை ஷகீலா, இம்மாதிரி சிறிய அளவு நிகழ்ச்சி நடந்துவது நன்மையே என்றும், பெரிய அரங்குகளில் நடத்தி காசை கரியாக்காமல் இருப்பது சாலச் சிறந்தது என்றும் என்னை கேரளாவில் கொண்டாடியது போல தமிழ் நாட்டில் உங்களை கொண்டாடுவார்கள் என்றும் இந்த மாதிரி தயாரிப்பாளர்களை ஏமாற்றாமல் நாம் தான் வாழ வைக்க வேண்டும் என்றும் கூறினார்.


