மும்பையில் குழந்தைகளை பணயக் கைதிகளாக பிடித்து வைத்து மிரட்டிய வெப் சீரிஸ் இயக்குநரை போலீஸார் சுட்டுக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம், புணேயைச் சேர்ந்தவர் ரோஹித் ஆர்யா. இவர் வெப் சீரிஸ் இயக்குநராவார். திரைப்படம் எடுக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தார். சிவசேனாவை சேர்ந்த தீபக் கேசர்கர், கல்வி மத்திய அமைச்சராக இருந்த போது, ரோஹித் ஆர்யா கல்வி தொடர்பான டெண்டரை எடுத்துள்ளார். அத்துடன் சில ஆண்டுகளுக்கு முன்பு எனது பள்ளி, அழகான பள்ளி (மாஜி சாலா, சுந்தர் சாலா) திட்டத்தை ரோஹித் ஆர்யா உருவாக்கியுள்ளார். ஆனால், இந்த திட்டத்திற்கு அரசிடமிருநது எந்த அங்கீகாரமோ, ஊதியமோ கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இதனால் தனக்கு ஊதியம் வழங்க வேண்டும் என்று பல்வேறு கட்ட போராட்டங்களை ஆர்யா நடத்தி உள்ளார். அத்துடன் கல்வித்துறை அமைச்சர் தீபக் கேசர்கர் வீட்டின் முன்பும் போராட்டம், ஒரு மாத உண்ணாவிரத போராட்டம் நடத்தினார். இதனால் அவரிடம் கல்வித்துறை அரைமச்சராக இருந்த தீபக் கேசர்கர் பேச்சுவார்த்தை நடத்தி போராட்டத்தை கைவிடச் செய்தார். ஆனாலும் ஆர்யாவின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை.
இதனால் விரக்தி அடைந்த ரோஹித் ஆர்யா, நான் தற்கொலை செய்தால் அதற்கு தீபக் கேசர்கர், அவரது தனிச்செயலாளர் மங்கேஷ் ஷிண்டே, முன்னாள் கல்வித்துறை ஆணையர் சுரஜ் மந்தாரே, துஷார் மகாஜான், சமீர் சாவந்த் ஆகியோர் தான் காரணம் என்றும் கூறியிருந்தார்.
இந்த நிலையில், மும்பை பவாய் பகுதியில் உள்ள ஆர்.ஏ. ஸ்டுடியோவில் 8 முதல் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகள் வெப் சீரிஸ் ஆடிசன் நடப்பதாக ரோஹித் ஆர்யா அறிவித்திருந்தார். சமூக ஊடக சேனல் உரிமையாளர் என்ற பெயரில் இந்த அழைப்பை அவர் விடுத்திருந்தார். இரண்டு நாட்களாக ஆடிசன்களையும் அவர் நடத்தியுள்ளார். இந்த நிலையில், திடீரென அவர் 17 குழந்தைகளையு, 2 பெரியவர்களையும் ஸ்டுடியோவில் பணயக்கைதிகளாக பிடித்து வைத்துக் கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
அத்துடன் ஒரு வீடியோ வெளியிட்டார். அதில், மகாராஷ்டிரா முன்னாள் கல்வி அமைச்சர் தீபக் கேசர்கருடன் பேச வேண்டும் என்றும், அவரிடம் சில கேள்விகளையும் கேட்க வேண்டும் என்றும் கூறியிருந்தார். அத்துடன் தான் தற்கொலை செய்து கொள்ள விரும்பவில்லை என்றும் கூறியிருந்தார்.
இதனையடுத்த சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸார், ரோஹித் ஆர்யாவை சரணடையுமாறு அறிவுறுத்தினர். ஆனால், போலீஸாரை நோக்கி ஆர்யா ஏர் கன் மூலம் சுட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து போலீஸார், பதிலுக்கு துப்பாக்கி சூடு நடத்தியதில் ரோஹித் ஆர்யா மீது குண்டு பாய்ந்தது. அவரை அருகிலுள்ள பாலாசாகேப் தாக்கரே மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.. ஆனால், அங்கு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து ஆர்யாவால் பணயக் கைதிகளாக பிடித்து வைக்கப்பட்ட 17 பேரையும் போலீஸார் பத்திரமாக மீட்டனர். இந்த சம்பவம் மும்பையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


