சுதந்திர போராட்ட வீரர் பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் குருபூஜையை முன்னிட்டு மதுரையில் உள்ள அவரது சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின், 118வது ஜெயந்தி மற்றும் 63ம் ஆண்டு குருபூஜை இன்று நடைபெறுகிறது. இவ்விழா அரசு விழாவாக நடைபெறுகிறது. இதனையடுத்து மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள தேவர் சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அவருடன் கனிமொழி எம்.பி, அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், பெ.மூர்த்தி சாத்தூர் ராமச்சந்திரன், அன்பில் மகேஷ், கே.ஆர்.பெரியகருப்பன், டி.பி.ஆர்.ராஜா மற்றும் சட்டமன்ற உறுப்பினர் கோ.தளபதி உள்பட ஏராளமானோர் தேவர் சிலைக்கு மாலை அணிவித்தனர்.
இதன் பின் சிலைக்கு கீழ் அமைக்கப்பட்டிருந்த தேவர் உருவப்படத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார். தேவர் ஜெயந்தியை முன்னிட்டு மதுரை மாநகரில் 3,000-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து ராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன்னில் உள்ள தேவர் நினைவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் மரியாதை செலுத்த உள்ளனர். அதிமுக, காங்கிரஸ், மதிமுக, பாஜக உள்ளிட்ட பல்வேறு கட்சி தலைவர்கள் மரியாதை செலுத்துகின்றனர்.


