பாலிவுட் நடிகையுடன் பாலியல் நடவடிக்கைகளில் ஈடுபடுவது போன்ற பொய்யான வீடியோக்களைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்று தெலுங்கு திரையுலகின் மெகா ஸ்டாரான சிரஞ்சீவி போலீஸில் புகார் அளித்துள்ளார்.
தெலுங்கு திரையுலகின் பிரபல நடிகரான சிரஞ்சீவி, மெகா ஸ்டார் என்ற அம்மாநில ரசிகர்களால் அழைக்கப்படுகிறார். அவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இந்த நிலையில், தெலங்கானா மாநிலம், ஹைதராபாத் சைபர் கிரைம் போலீஸில் ஐந்து பக்க புகார் கடிதத்தை நடிகர் சிரஞ்சீவி கொடுத்துள்ளார். அதில், செயற்கை நுண்ணறிவான ஏ.ஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஆபாச டீப்ஃபேக் வீடியோக்களில் தான் இருப்பது போன்ற சித்தரிக்கப்பட்டது குறித்து கவலையுடன் அவர் புகார் அளித்துள்ளார்.
அந்த புகாரில்,” ஏ.ஐ தொழில் நுட்பத்தால் ஜோடிக்கப்பட்ட வீடியோக்கள் எனது நற்பெயருக்கு களங்கம் விளைவிப்பதுடன், தனியுரிமை மற்றும் கண்ணியத்திற்கான அரசியலமைப்பு உரிமையையும் மீறுகின்றன. மூன்று வலைதளங்களில், பாலிவுட் நடிகையுடன் பாலியல் நடவடிக்கைகளில் நான் ஈடுபடுவது போன்ற பொய்யான வீடியோக்களை பதிவு செய்வதன் மூலம் சிலர் பணம் சம்பாதிக்கின்றனர். இந்த ஜோடிக்கப்பட்ட வீடியோக்கள் என்னை ஆபாசமான மற்றும் அநாகரீமான சூழல்களில் சித்தரிக்கவும், பொதுமக்கள் மத்தியில் என் மீது இருக்கும் நல்லெண்ணத்தை சேதப்படுத்தவும் தீய நோக்கத்துடன் பயன்படுத்தப்படுகின்றன. இது போன்ற வீடியோக்களால் நானும், எனது குடும்பத்தினர் கடும் துயரத்திற்கு உள்ளாகியுள்ளோம். .ஏ.ஐ மூலம் உருவாக்கப்பட்ட இந்த வீடியோக்கள் மூலம் வணிக லாபம் ஈட்டுவோர் மீது சைபர் கிரைம் போலீஸார் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.
மேலும் ஏ.ஐ தொழில்நுட்பத்தால் போலியாக உருவாக்கப்பட்ட ஆபாச வீடியோக்கள் அடங்கிய வலைதள இணைப்புகளையும் அவர் காவல்துறையில் சமர்பித்தார். உடனடியாக அனைத்து தளங்களிலும் இருந்து செயற்கையாக உருவாக்கப்பட்ட தனது ஆபாச வீடியோக்களை அகற்ற வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.


