மனநலம் பாதித்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தவரை நிர்வாணமாக்கி செருப்பு மாலை அணிந்து ஊர்வலமாக அழைத்துச் சென்ற மக்கள் அவரை அடித்துக் கொன்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜார்க்கண்ட் மாநிலம், மேற்கு சிங்பூம் மாவட்டத்தில் உள்ள தேவம்பிர் கிராமத்தில் தான் இந்த அதிர்ச்சி சம்பவம் நடைபெற்றுள்ளது. மனநலம் பாதித்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாக சைமன் டிர்கி(56) என்பவரை கிராம மக்கள் பிடித்தனர். அவருக்கு செருப்பு மாலை போட்டு கிராமம் முழுவதும் ஊர்வலமாக அழைத்து வந்தனர். அதன் பின் அறையில் வைத்து அவரை தாக்கினர். இதன்பின் அவரை அந்த அறையில் பூட்டி வைத்து விட்டுச் சென்றனர். மறுநாள் காலை அந்த அறையை திறந்த போது அவர் உயிரிழந்தது தெரிய வந்தது.
இந்த தகவல் அறிந்த சோனுவா காவல் நிலைய போலீஸார், அடித்து கொலை செய்யப்பட்ட சைமன் டிர்கி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சாய்பாசா சதார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தில் தொடர்புடைய இரண்டு பெண்கள் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருவதாக சக்ரதர்பூர் துணைப்பிரிவு காவல் அதிகாரி சிவம் பிரகாஷ் தெரிவித்தார்.
மேலும் அவர் கூறுகையில், சைமன் டிர்கி குடும்பத்தினர் அளித்த புகாரின் அடிப்படையில், கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அத்துடன் மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினர் சைமன் மீது பாலியல் பலாத்காரக் குற்றம் சாட்டி புகார் அளித்துள்ளனர். இந்த இரண்டு புகார்களையும் தீவிர விசாரணை நடத்தி வருகிறோம் என்றார்.
இந்த சம்பவத்தால் கிராமத்தில் பதற்றமான சூழ்நிலை நிலவுவதால், கூடுதல் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்திற்கு பின்னால், யாராவது தூண்டி விட்டார்களா அல்லது கோபத்தின் வெளிப்பாடாக இந்த சம்பவம் நடந்ததா என போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


