கேரளாவில் நேற்று நள்ளிரவில் திடீரென ஏற்பட்ட நிலச்சரிவில் ஒரு வீடு புதைந்ததால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
கேரளா மாநிலம், அடிமாலியில் உள்ள தேசிய நெடுஞ்சாலை அருகே மலையில் திடீரென நேற்று நள்ளிரவு நிலச்சரிவு ஏற்பட்டது. இதில், பாறைகள் இடிந்து விழுந்ததில் ஒரு வீடு புதைந்தது. இதையறிந்த மீட்பு படையினர், போலீஸார் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். ஜேசிபி இயந்திரங்கள் மூலம் பாறைகளை அகற்றும் பணி நடைபெற்றது. பலமணி நேரமாக மீட்பு நடவடிக்கை நடைபெற்றது. இதனால் அந்த வீட்டிற்குள் இருந்த பிஜு , அவரது மனைவி சந்தியாவின் நிலைமை என்ன ஆனது என்ற கேள்விக்குறி ஏற்பட்டது.
பெரிய கான்கிரீட் கற்கள் இடிந்து சுவர்களில் விழுந்ததால் படுக்கை மற்றும் அலமாரி ஆகியவற்றுக்கு இடையே தம்பதியினர் சிக்கிக் கொண்டனர், இதனால் மீட்புப் பணியாளர்கள் அவர்களை மீட்பதில் சிரமம் ஏற்பட்டது. இதன் பின் 7 மணி நேரப்போராட்டத்திற்குப் பிறகு அந்த வீட்டிற்குள் இருந்த இருவரையும் மீட்பு படையினர் மீட்டனர்.
அவர்கள் இருவரையும் கொச்சியில் உள்ள ராஜகிரி மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால், பிஜு ஏற்கெனவே உயிரிழந்தார் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர். படுகாயங்களுடன் சந்தியா சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


