திருச்செந்தூர் முருகன் கோயிலில் இன்று நடைபெறும் பிரசித்திபெற்ற சூரசம்ஹார நிகழ்வைக் காண லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்.
முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் திகழ்கிறது. இந்த கோயிலில் ஆண்டு தோறும் நடைபெறும் விழாக்களில் கந்தசஷ்டி திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். அந்த வகையில், இந்த ஆண்டு கந்த சஷ்டி திருவிழா கடந்த 22-ம் தேதி யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. அன்று முதல் சுப்பிரமணிய சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகின்றன.
இந்த நிகழ்வின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் இன்று நடைபெறுகிறது. இன்று மாலை 4,30 மணிக்கு ஜெயந்திநாதர் சூரசம்ஹாரத்துக்கு எழுந்தருளுகிறார். திருச்செந்தூர் கடற்கரையில் சுவாமி ஜெயந்திநாதர் சூரபத்மனை வதம் செய்யும் நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் கோலாகலமாக நடக்கிறது. இதனைக் காண்பதற்கு தூத்துக்குடி மாவட்டம் மட்டுமின்றி தென் மாவட்டங்கள், வெளிமாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.
பக்தர்களின் பாதுகாப்பை கருதி, கடற்கரையில் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளன. சூரசம்ஹார நிகழ்வுக்காக சிறப்பு பேருந்துகள், ரயில்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.
சூரசம்ஹாரம் நிகழ்ச்சியையொட்டி திருச்செந்தூரில் 4 ஆயிரத்திற்கும் அதிகமான போலீஸார் பாதுகாப்புப்பணியில் குவிக்கப்பட்டுள்ளனர்.


