இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் போன்ற சமூக ஊடகங்களில் யாக சாலை தடுகள் விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயில் நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில்,” திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் கந்தசஷ்டி திருவிழா முதல் நாளன்று யாகசாலையில் வெள்ளி, செம்பு தகடுகள் (யந்திரங்கள்) வைக்கப்பட்டு பூஜைகளுக்குப் பின்னர், ஆறாம் நாள் சூரசம்ஹார நாளன்று யாகசாலையிலிருந்து எடுக்கப்பட்டு கோயில் அலுவலகம் மூலம் மட்டுமே பக்தர்களுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், சஷ்டி யாகசாலை தகடுகள் (யந்திரம்) விற்பனை செய்யப்படுவதாகக் கூறி பக்தர்களிடம் பணம் பறிக்கும் நோக்குடன் சிலர் இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் போன்ற சமூக ஊடகங்களில் வீடியோக்கள் வெளியிட்டு பகிர்ந்து வருவது கோயில் நிர்வாகத்தின் கவனத்துக்குத் தெரியவந்துள்ளது. கோயில் நிர்வாகத்தால் எந்தவொரு தனிநபருக்கோ அல்லது அமைப்புக்கோ கந்தசஷ்டி தகடுகளை விற்பனை செய்யவோ அல்லது பணம் வசூலிக்கவோ அனுமதி வழங்கப்படவில்லை.
எனவே, பக்தர்கள் சமூக வலைதளங்கள், இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் போன்ற சமூக ஊடகங்களில் வரும் தவறான விளம்பரங்கள் அல்லது இணைப்புகள் மூலம் பணம் செலுத்த வேண்டாம். இத்தகைய தவறான தளங்களை நம்பி யாரும் ஏமாற வேண்டாம். கோயில் பெயரை தவறாகப் பயன்படுத்தி பக்தர்களை ஏமாற்ற முயலும் நபர்கள் மீது காவல் துறை மூலம் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்படுகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


