தாய்லாந்தின் ராஜமாதா சிரிகிட் காலமானார். அவருக்கு வயது 93.
தாய்லாந்தின் தற்போதைய மன்னர் வஜிராலங்கார்னின் தாயாரான ராஜமாதா சிரிகிட் உடல்நலக்குறைவால் காலமானார். ராஜமாதா சிரிகிட், தாய்லாந்து நேரப்படி நேற்று இரவு 9.21 மணிக்கு பாங்காக்கில் உள்ள சுலாலொங்கோர்ன் மருத்துவமனையில் இயற்கை எய்தியதாக தாய்லாந்து அரச மாளிகை அறிவித்துள்ளது.
ராஜமாதா சிரிகிட், தாய்லாந்தை மிக நீண்ட காலம் ஆட்சி செய்த மன்னரான பூமிபால் அதுல்யதேஜின் மனைவியாவார். அக்டோபர் 17-ம் தேதி முதல் ரத்த தொற்று காரணமாக சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது உடல், இறுதிச் சடங்கு வரை பாங்காக்கில் உள்ள கிராண்ட் பேலஸில் வைக்கப்பட உள்ளது.
1932 ஆகஸ்ட் 12 பிறந்த ராஜமாதா சிரிகிட்டின் பிறந்தநாள், தாய்லாந்தில் அன்னையர் தினமாக கொண்டாடப்பட்டு பொது விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது. தனது 18 வயதில் மன்னர் பூமிபாலை சிரிகிட் திருமணம் செய்து கொண்டார். கடந்த 2016-ம் ஆண்டு பூமிபால் காலமான பின் மகன் வஜிராலங்கார்ன் மன்னராக முடிசூடினார்.
கடந்த 2012-ம் ஆண்டில் ராஜமாதாவுக்கு பக்கவாதம் ஏற்பட்டதிலிருந்து பொது நிகழ்ச்சிகளில் அவர் கலந்துகொள்ளவில்லை. 2019-ம் ஆண்டில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.


