இறுதிச்சடங்கிற்கு பின் நடைபெற்ற விருந்தில் உணவு சாப்பிட்ட 5 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சத்தீஸ்கர் மாநிலம், நாராயண்பூர் மாவட்டத்தின் உள்ள துங்கா கிராமத்தில் ஒருவர் உயிரிழந்தார். இந்த இறப்பிற்கு கிராமத்தினர் சென்றிருந்தனர். இறுதிச்சடங்கு நடைபெற்ற பிறகு இறந்தவர் வீட்டில் இரவு விருந்து நடைபெற்றுள்ளது. இந்த விருந்தில் கிராமத்தைச் சேர்ந்த பலர் கலந்து கொண்டு உணவை சாப்பிட்டுள்ளனர். உணவு சாப்பிட்ட சிறிது நேரத்திலேயே பலருக்கு வாந்தி, பேதி ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து அவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இதில் ஊர்மிளா(25), அவரது இரண்டு மாதக் குழந்தை, புதாரி(25), புதாராம்(24), லக்கே(45) ஆகியோர் சிகிச்சை பலனின்றி அடுத்தடுத்து உயிரிழந்தனர். இதனால் கிராமத்தில் பதற்றம் ஏற்பட்டது.
இந்த சம்பவம் குறித்து நாராயண்பூர் தலைமை மருத்துவ மற்றும் சுகாதார அதிகாரி குன்வர் கூறுகையில், “உணவில் ஏற்பட்ட மாற்றம் காரணமாக அதாவது மாசு நிறைந்த உணவைச் சாப்பிட்டதால் இறப்புகள் ஏற்பட்டதாக அறிக்கையில் தெரிய வந்துள்ளது” என்றார். இறப்பு வீட்டிற்கு வந்து உணவு சாப்பிட்ட ஐந்து பேர் உயிரிழந்த சம்பவம் நாராயண்பூர் மாவட்டத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


