வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக திண்டுக்கல் மாவட்ட கனிம வளத் துறை உதவி இயக்குநர் செல்வசேகரன் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் திடீர் சோதனை ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திண்டுக்கல் மாவட்ட கனிம வளத் துறை உதவி இயக்குநராக இருப்பவர் செல்வசேகரன். இவர் திண்டுக்கல் மாவட்டம், சென்னமயநாயக்கன்பட்டியில் வசித்து வருகிறார். இவரது குடும்பத்தினர் திருநெல்வேலியில் வசிக்கின்றனர். இந்தி நிலையில், செல்வசேகரன் வசித்து வரும் சென்னமயநாயக்கன்பட்டியில் திண்டுக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி நாகராஜன் தலைமையில் இன்ஸ்பெக்டர் கீதா ரூபா ராணி உள்ளிட்ட லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் இன்று சோதனை மேற்கொண்டனர்.
கடந்த 2015-ம் ஆண்டு முதல் 2022-ம் ஆண்டு வரை திருநெல்வேலி, விழுப்புரம், விருதுநகர் மாவட்டங்களில் புவியியல் மற்றும் சுரங்கத் துறையில் செல்வசேகரன் பணிபுரிந்த போது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக விருதுநகர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த வழக்குத் தொடர்பாக செல்வசேகரன் வீட்டில் திண்டுக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் இன்று சோதனை மேற்கொண்டனர்.
இந்த சோதனையின் போது முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. மேலும் செல்வசேகரன் திருநெல்வேலி வீட்டிலும் லஞ்ச ஒழிப்பு போலீஸார் சோதனை நடத்தியுள்ளனர். இதன் காரணமாக கனிமவளத்துறையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


