தோழனுக்கு தோள் கொடுப்போம். அதே தோழன் காதை கடித்தால், தூக்கி கீழே போட்டு மிதிக்கவும் செய்வோம் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பேசியுள்ளார்.
மதுரையில் அதிமுக 54-ம் ஆண்டு தொடக்க விழாவையொட்டி நடைபெற்ற கூட்டத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு கட்சியினர் சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில்,, “ தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தன்னைத் தானே தலைவர் என்று சொல்லிக் கொண்டுள்ளார். அவரை யாரும் தலைவராக ஏற்றுக் கொள்ளவில்லை. என்னென்னமோ நடித்து பார்க்கிறார். உதயநிதி ஸ்டாலினை ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தின் நாயகனாகத்தான் மக்கள் பார்க்கிறார்கள். கடந்த தேர்தலில் ஒரு செங்கலை காண்பித்து எங்கே எய்ம்ஸ் மருத்துவமனை என்றார். நீட் தேர்வு ரத்து ரகசியம் என்று சொன்னார். இப்போது மீண்டும் வந்து செங்கலை தூக்கி உதயநிதி காண்பிப்பாரா? அப்படி காண்பித்தால் நம்ம ஆட்களும் செங்கலை தூக்க ஆரம்பித்து விடுவார்கள்.
அதிமுக கூட்டணிக்காக அலையாய் அலைவதாக சொல்கிறார்கள். அதிமுக ஒருபோதும் யாருடனும் கூட்டணி வைத்துக் கொள்ளும்படி அலைந்ததில்லை அத்துடன் அதிமுக தொண்டர்கள் மாற்றுக்கட்சியின் கொடியைத் தூக்கியதாக வரலாறே கிடையாது. அடுத்த கட்சிக் கொடியை தூக்கிப் பிடிக்கும் அளவுக்கு அதிமுககாரன் இழிபிறவி கிடையாது. அதிமுக எந்த நேரத்திலும், எந்த சூழ்நிலையிலும் யாரையும் வம்பாக கூட்டணிக்கு அழைத்தது கிடையாது.
எங்களுக்கு துணையாக தமிழக மக்களைக் காப்பாற்ற யார் துணை வந்தாலும் அவர்களை தூக்கிக் கொண்டாடுவோம். அதிமுக எப்போதும் யாருக்கும் துரோகம் இழைத்தது கிடையாது. நண்பன் என்றால் நண்பேண்டா என்று சொல்லி, நண்பனுக்கு உயிரையே கொடுப்போம். தோழனுக்கு தோள் கொடுப்போம். அதே தோழன் காதை கடித்தால், தூக்கி கீழே போட்டு மிதிக்கவும் செய்வோம்; இதுதான் அதிமுக வரலாறு” என்றார்.


