சந்திர தரிசனம் என்னும் மூன்றாம் பிறை நாளான இன்று பிறைச்சந்திரனை பார்ப்பதால் பலன்கள் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.
சந்திர தரிசனம் என்பது அமாவாசைக்கு அடுத்த மூன்றாம் நாளில் தெரியும் பிறைச் சந்திரனைப் பார்ப்பதாகும். அதாவது மூன்றாம் பிறையைப் பார்ப்பதாகும். அமாவாசைக்கு மறுநாள் நிலவு தெரிவதில்லை. ஆனால், மூன்றாம் நாளான தெரியும் நிலவு அழகாகவும், பிரகாசமாகவும் இருக்கும். மூன்றாம் பிறையானது இரவு வருவதற்கு முன்பு 6.30 மணியளவில் தோன்றுவதாகும். இந்த மூன்றாம் பிறையை தெய்வீக பிறை என்று அழைக்கிறார்கள். சிவபெருமான் தன் தலையில் மூன்றாம் பிறை சந்திரனை சூடியுள்ளார். இதன் காரணமாகவே அவர் சந்திர மௌலீஸ்வரராக காட்சி தருகிறார்.
மூன்றாம் பிறையை தரிசனம் செய்வது வெறும் சந்திர தரிசனம் அல்ல. சிவபெருமானில் ஒரு பகுதியை தரிசிக்கும் பாக்கியம் கிடைக்கும். இந்த சந்திர தரிசனம் கிடைக்கும் போதெல்லாம் ஸ்ரீசந்திர மௌலீஸ்வராய நம என்றோ ஸ்ரீசந்திர மௌலீஸ்வரா போற்றி என்று ஜெபித்தால் மனம் அமைதி அடையும்.
சந்திர தரிசனம் செய்வதால் அறிவு, ஞாபக சக்தி, செல்வம், சந்தோஷம் ஆகியவை அதிகரிக்கும் என்றும், பாவங்களைப் போக்கும் என்றும் நம்பப்படுகிறது. மூன்றாம் பிறைச் சந்திரனை தொடர்ந்து தரிசிப்பவர்களுக்கு அந்த ஆண்டு வருமானம் பன்மடங்கு விருத்தியாகும் என்பது சாஸ்திர நம்பிக்கையாகும். அதனால் ஒவ்வொரு மாதத்திலும் வரும் அமாவாசைக்கு பிறகு சந்திர தரிசனம் அன்று செய்ய கூடிய வழிபாடு மிகவும் விசேஷமானதாக கருதப்படுகிறது.


