தனியார் கல்லூரிகள் மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளை தனியார் பல்கலைக்கழகங்களாக மாற்ற அனுமதிக்கும் வகையில் ஆளும் திமுக அரசு சட்டமன்றத்தில் ஒரு சட்ட முன்வடிவை தாக்கல் செய்துள்ளது.
அரசியல் தலைவர்கள் எதிர்ப்பு
அதாவது, 2019-ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட தனியார் பல்கலைக்கழகங்கள் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான இந்த முன்வரைவு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இதற்கு அன்புமணி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில தலைவர் மு.வீரபாண்டியன், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர்கள், இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள் என பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.
இட ஒதுக்கீடு செயல்படுமா..?
காரணம், இந்த சட்ட மசோதாவை மட்டும் தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டால் உயர்கல்வி நிலையங்களில், இனி இட ஒதுக்கீடு என்பது பெரும் கேள்விக் குறியாகிவிடும்? பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, பட்டியலின சமூகம் என 69% உள் இடஒதுக்கீடு, வெறும் எண்களாக மட்டும் தான் இருக்கும் என்று பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
கல்வியாளர்களும் இந்த சட்டம் நிறைவேற்றக் கூடாது என்று குரலில் எழுப்பி வருகிறார்கள்.

தனியார்மயமாக்கும் உயர்க்கல்வி :-
கலை அறிவியல் மற்றும் பொறியியல் கல்லூரிகள் பல்கலைக்கழகங்களாக மாற்றப்படும்போது, இந்த இட ஒதுக்கீட்டுக் கட்டுப்பாடுகள் எதுவும் இருக்காது. இதனால், இந்த கல்வி நிறுவனங்கள் தங்களுக்கு விருப்பமான மாணவர்களை, தமிழக அரசின் 69% இட ஒதுக்கீட்டைக் கடைபிடிக்காமல் சேர்க்க முடியும்.
மருத்துவம் சார்ந்த கல்லூரிகளுக்கு கூட, நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களை இட ஒதுக்கீடு இல்லாமல் நிரப்பிக் கொள்ளும் வாய்ப்பு உள்ளது.

கட்டண கொள்ளை; லாபமே குறிக்கோள்!
மேலும் தனியார் கல்லூரிகளின் தாளாளர்கள், மாணவர்களிடம் லட்சக்கணக்கில் கட்டணம் வசூல் செய்வதே குறிக்கோளாக கொண்டு செயல்படுவார்கள். இந்த சட்டம் அமல்படுத்தப்பட்டால் பட்டப்படிப்புகள் பெருமளவில் லாபம் நோக்கத்துடன் மட்டுமே செயல்படும். இதனால் ஏழை எளிய மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள் என்று கல்வியாளர்கள், பேராசிரியர்கள் குற்றம்சாட்டுகிறார்கள்.

நிறைவேற்றுமா? திரும்பப் பெறுமா?
எனவே தனியார் பல்கலைக்கழக திருத்த சட்டத்தை அமல்படுத்தக் கூடாது என்று மாணவர்களும், கல்வியாளர்களும் அரசியல் கட்சித் தலைவர்களும் கோரிக்கை விடுத்துள்ளார்கள். இதனை தமிழக அரசு ஏற்குமா? அல்லது எதிர்ப்பை மீறி இச்சட்டத்தை அமல்படுத்துமா?
மேலும், “இந்தச் சட்டத்தை, விவாதம் கூட நடத்தாமல் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட தமிழக அரசு திட்டமிடப்பட்டுள்ளதாகவும்” தகவல் வெளியாகி உள்ளது.


