கடன் தொல்லையால் மனைவி, இரண்டு மகன்களை அடித்துக் கொலை செய்த தொழிலதிபர் கழுத்தை அறுத்து தற்கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள அடிக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவர் சிரஞ்சீவி தாமோதரகுப்தா(56). இவர் சென்னை மவுண்ட் ரோடு பகுதியில் சிசிடிவி கேமராக்களை விற்பனை செய்யும் கடை நடத்தி வந்தார். இவரது மனைவி ரேவதி. இந்த தம்பதியருக்கு இரண்டு மகன்கள் இருந்தனர். அதிக கடனை பெற்று இந்த தொழிலை சிரஞ்சீவி செய்து வந்துள்ளார். தொழிலில் ஏற்பட்ட நஷ்டத்தால் சிரஞ்சீவி தாமோதரகுப்தாவுக்கு கடன் அதிகரித்துள்ளது.
இதனால் அவதிப்பட்டு வந்த சிரஞ்சீவி தாமோதரகுப்தா , நேற்று இரவு மனைவி மற்றும் இரண்டு மகன்களை அடித்துக் கொலை செய்துள்ளார். இதன்பின் கழுத்தை அறுத்து அவர் தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் தொடர்பாக அக்கம்பக்கத்தினர் அளித்த தகவலைத் தொடர்ந்து, விரைந்து சென்ற நீலாங்கரை போலீஸார், நான்கு பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
தொழிலதிபர் சிரஞ்சீவி தற்கொலை செய்தவற்கு முன்பு எழுதிய கடிதத்தையும் போலீஸார் கைப்பற்றினர். அந்த கடிதத்தில், தொழிலில் ஏற்பட்ட நஷ்டத்தாலும், வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாததால் என் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்வதாகவும், எங்களுடைய இறப்பிற்கு யாரும் காரணமல்ல என்று குறிப்பிட்டுள்ளார். இதனால் கடன் கொடுத்தவர்கள் யாராவது சிரஞ்சீவி குடும்பத்தினருக்கு தொல்லை கொடுத்தனரா என போலீஸார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


