திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்தசஷ்டி திருவிழா இன்று காலை யாகசாலை பூஜையுடன் தொடங்கியது.
முருக பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கந்தசஷ்டி திருவிழா இன்று காலை யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. இதை முன்னிட்டு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் அதிகாலையில் இருந்தே திருசெந்தூர் கடல், நாழிக்கிணறு புனித தீர்த்தத்தில் நீராடி சாமி தரிசனம் செய்து விரதத்தை தொடங்கினர்.
கந்தசஷ்டி திருவிழாவை முன்னிட்டு கோயில் நடை அதிகாலை 1 மணிக்கு திறக்கப்பட்டது. 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகமும் நடந்தது. காலை 5.30 மணிக்கு துலாம் லக்னத்தில் சுவாமி ஜெயந்திநாதர் யாக சாலையில் எழுந்தருளினார். அங்கு காலை 7 மணிக்கு யாக பூஜையுடன் கந்தசஷ்டி திருவிழா தொடங்கியது. பகல் 12 மணிக்கு யாக சாலையில் தீபாராதனை நடைபெற உள்ளது. தீபாராதனைக்கு பின் சுவாமி ஜெயந்திநாதர் வள்ளி, தெய்வானையுடன் தங்கச் சப்பரத்தில் எழுந்தருளி வேல் வகுப்பு, வீரவாள் வகுப்பு ஆகிய பாடல்களுடன் மேளதாளத்துடன் சண்முக விலாச மண்டபத்திற்கு எழுந்தருளினார். அங்கு சுவாமிக்கு மகா தீபாராதனை நடைபெற உள்ளது.
இதன்பின் மாலை 3.30 மணிக்கு மூலவருக்கு நடைபெறும் சாயரட்சை தீபாராதனைக்கு பிறகு சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி-தெய்வானையுடன் திருவாவடுதுறை ஆதீன சஷ்டி மண்டபத்தில் எழுந்தருளுகிறார். அங்கு சுவாமி, அம்பாளுக்கு பல்வேறு வகையான அபிஷேக பொருட்களால் அபிஷேகம் நடைபெற்று அலங்காரமாகி தீபாராதனை பின் சுவாமி, அம்பாளுடன் தங்க ரதத்தில் எழுந்தருளி கிரி வீதியில் பவனி வந்து கோயில் சேர்தல் நடக்கிறது. அக்.27-ம் தேதி மாலை 4.30 மணிக்கு சுவாமி ஜெயந்திநாதர் சூரசம்ஹாரத்துக்கு கடற்கரையில் எழுந்தருள்கிறார். அங்கு சுவாமி ஜெயந்திநாதர், சூரபத்மனை வதம் செய்யும் சூரசம்ஹார நிகழ்ச்சி நடக்கிறது. பின்னர் கடற்கரையில் அமைந்துள்ள சந்தோஷ மண்டபத்தில் சுவாமிக்கும், அம்பாளுக்கும் அலங்காரம் நடைபெற்று மகா தீபாராதனைக்குப் பிறகு சுவாமி, அம்பாள் கிரிப்பிரகாரம் வழியாக கோயில் சேர்கிறார்கள்.
அங்கு இரவு 108 மகாதேவர் சன்னதி முன்பு சாயாபிஷேகம் நடைபெற்று சஷ்டி தகடு கட்டுதல் நடக்கிறது. 7-ம் திருவிழாவான அக்.28-ம் தேதி மாலை சுவாமி குமரவிடங்க பெருமான் மாலை மாற்று வைபவத்திற்கு புறப்படுகிறார். பின்னர் மாலை 6 மணியளவில் அம்பாளுக்கு, சுவாமி காட்சி அருளி தோள் மாலை மாற்றும் நிகழ்ச்சி நடக்கிறது. இரவு 11 மணிக்கு மேல் சுவாமி குமரவிடங்க பெருமானுக்கும், தெய்வானை அம்பாளுக்கும் வைதீக முறைப்படி திருக்கல்யாண வைபவ நிகழ்ச்சி நடக்கிறது. விழா நாட்களில் கோயில் கலையரங்கில் பக்தி இன்னிசை, பக்தி சொற்பொழிவு நடக்கிறது. கந்தசஷ்டி திருவிழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் தக்கார் அருள்முருகன், இணை ஆணையர் ராமு மற்றும்பணியாளர்கள் செய்து வருகின்றனர்.


