கர்நாடகாவில் ஆர்எஸ்எஸ் அணிவகுப்பில் கலந்துகொண்ட பஞ்சாயத்து வளர்ச்சி அலுவலர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
கர்நாடக மாநிலத்தில் பொது இடங்கள், பள்ளிக்கூட வளாகங்கள் போன்றவற்றில் ஆர்.எஸ்.எஸ். நிகழ்ச்சி நடைபெற தடைவிதிக்கும் வகையில் விதி கொண்டுவர அம்மாநில அமைச்சரவை முடிவு செய்துள்ளது. இதற்கு பாஜக மற்றும் இந்து அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்தன. இந்நிலையில், கர்நாடகாவின் ராய்ச்சூர் மாவட்டத்தில் நடைபெற்ற ஆர்எஸ்எஸ் பேரணியில் அந்த அமைப்பின் சீருடை அணிந்து கலந்துகொண்ட பஞ்சாயத்து வளர்ச்சி அலுவலர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
ஆர்எஸ்எஸ் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு லிங்கசுகூரில் நடைபெற்ற அணிவகுப்பில் சிர்வார் தாலுகா பஞ்சாயத்து மேம்பாட்டு அதிகாரி பிரவீன் குமார் சீருடை அணிந்து தடி ஏந்தி பங்கேற்றார். இந்த செயல் அரசு ஊழியர்களின் நடத்தை விதிமுறைகளை மீறுவதாக புகார் எழுந்தது. ராய்ச்சூர் மாவட்ட பஞ்சாயத்து தலைமை நிர்வாக அதிகாரி நடத்திய விசாரணையைத் தொடர்ந்து, பஞ்சாயத்து ராஜ் துறை ஆணையர் அருந்ததி சந்திரசேகர், ஆர்எஸ்எஸ் அணிவகுப்பில் பங்கேற்ற பிரவீன் குமாரை இடைநீக்க உத்தரவைப் பிறப்பித்தார்.
இந்த நடவடிக்கை சட்டவிரோதமாது என்று பாஜக யுவ மோர்ச்சா தலைவர் தேஜஸ்வி சூர்யா கூறியுள்ளார். இதுகுறித்து அவரது எக்ஸ் தளத்தில், “அரசு ஊழியர்கள் ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் உரிமையை நிலைநிறுத்திய உயர் நீதிமன்றங்கள் பலவற்றிலிருந்து பல தீர்ப்புகள் உள்ளன. இந்த சட்டவிரோத இடைநீக்கம் ரத்து செய்யப்படும் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை” என்று தேஜஸ்வி சூர்யா பதிவிட்டுள்ளார்.


