கரூர் கூட்டத்துக்கு முழுமையான பாதுகாப்பை காவல்துறை அளிக்காததாலும், இந்த அரசின் அலட்சியத்தாலும் 41 பேர் உயிரிழந்தனர் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் கரூர் சம்பவம் தொடர்பாக கவனம் ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இதன் மீது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம் கொடுத்தார் அப்போது அதிமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தனர். இதன்பின் சட்டப்பேரவை வளாகத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களிடம் கூறுகையில், ” கரூர் விவகாரம் குறித்து சட்டப்பேரவையில் முதலமைச்சர் விளக்கம் கொடுத்தார். கரூரில் தவெக தலைவர் விஜய் பேசும்போது செருப்பு வந்து விழுந்தது குறித்து எதுவுமே சொல்லவில்லை. இந்தக் கூட்டத்துக்கு திமுக அரசு முழுமையான பாதுகாப்பு கொடுத்திருந்தால் உயிர் பலியைத் தவிர்த்திருக்கலாம்.
ஆனால், இந்த அரசு எதிர்க்கட்சிக்கு ஒரு நீதியாகவும் ஆளுங்கட்சிக்கு ஒரு நீதியாகவும்தான் பார்க்கப்படுகிறது. கரூர் கூட்டத்துக்கு முழுமையான பாதுகாப்பை காவல்துறை அளிக்காததாலும், இந்த அரசின் அலட்சியத்தாலும் 41 பேர் உயிரிழந்தனர். ஏற்கெனவே தவெக தலைவர் விஜய் திருச்சி, அரியலூர், நாகை, திருவாரூர், நாமக்கலுக்கு பிறகுதான் கரூர் வந்தார். இதனால், ஏற்கெனவே நடந்த கூட்டத்துக்கு எவ்வளவு பேர் வந்தனர் என்பது காவல்துறை, உளவுத் துறை, அரசுக்கும் தெரியும். அதற்கேற்றவாறே இடத்தை ஒதுக்கியிருக்க வேண்டும்.
கரூர் பாதுகாப்புப் பணியில் 500 பேர் ஈடுபடுத்தப்பட்டதாக சமூக ஊடகங்களில் பார்த்தேன். ஆனால், அந்தக் கூட்டத்தில் 500 காவலர்கள் இல்லை என்பது தெளிவாகத் தெரிகிறது. 500 பேர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டதாக ஏடிஜிபி கூறினார். ஆனால், 600-க்கும் மேற்பட்டோர் ஈடுபடுத்தப்பட்டதாக இன்று முதலமைச்சர் கூறுகிறார். இதிலேயே எவ்வளவு முரண்பாடு உள்ளது. இதனால்தான், இந்தச் சம்பவத்தில் அரசின் மீது மக்களுக்கு சந்தேகம் எழுகிறது’’ என்றார்.


