உங்கள் கடைக்கு 1.51 கோடி ரூபாய் மின்கட்டணம் செலுத்த வேண்டும் என்று வந்த அறிவிப்பால் மிட்டாய் வியாபாரி அதிர்ந்து போனார்.
இந்த சம்பவம் ஹரியாணாவின் பஞ்ச்குல மாவட்டத்தில் பர்வாலாவின் காக்ராலி கிராமத்தில் நடந்துள்ளது. இந்த கிராமத்தைச் சேர்ந்த மிட்டாய் வியாபாரி ஒருவர், சிறிய அளவில் மிட்டாய் கடை வைத்துள்ளார். இந்த மாதம் அவர் மின்கட்டணம் 1,51,36,008 ரூபாய் செலுத்த வேண்டும் என்று அவரது செல்போன்க்கு எஸ்எம்எஸ் வந்துள்ளது. இதனால் அவர் அதிர்ந்து போனார். வழக்கமாக மின் கட்டணம் சில நூறு ரூபாய் கட்டி வரும் நிலையில், ஒன்றரை கோடி ரூபாய் மின் கட்டணம் செலுத்த வேண்டும் என்ற மின்சார வாரியத்தின் தகவலால் குழம்பி போனார்.
இதனால் தனது செல்போனில் தனது மின் கட்டண எண்ணான 191287392772 -ஐ மூன்று முறை சரிபார்த்தார். ஆனால், ஒவ்வொரு முறையும் 1,51,36,008 ரூபாய் செலுத்த வேண்டும் என்ற தகவல் வந்துள்ளது. இதுகுறித்து உடனடியாக அவர் மின்துறை அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு தனக்கு வந்த மின் கட்டண விவரம் குறித்து புகார் செய்தார். இந்த தகவல் அறிந்த கிராம மக்கள் மிட்டாய் வியாபாரி வீட்டிற்கு முன் குவிந்தனர். மின்வாரியத்தின் இப்படியான அலட்சியத்தை ஏற்க முடியாது என்று மக்கள் கூறினர். இது ஒரு தொழில்நுட்ப பிழை, பில் 10 நாட்களுக்குள் சரி செய்யப்படும் என்று மின்வாரிய அதிகாரி கூறியுள்ளார்.
இதுகுறித்து மின்வாரிய எஸ்டிஓ கூறுகையில், “நுகர்வோருக்கு நிவாரணம் வழங்குவதே எங்கள் முன்னுரிமை. இந்த விஷயம் எங்கள் கவனத்திற்குரியது, மேலும் தொழில்நுட்பத் துறை பில்லை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டுள்ளது. நுகர்வோர் 10 நாட்களுக்குள் திருத்தப்பட்ட பில்லைப் பெறுவார்” என்றார்.


